கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..

Posted By:

Kalyana Veetu Surakkai Kootu Recipe In Tamil: நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளுள் ஒன்று தான் சுரைக்காய். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சுரைக்காய் என்றாலே பிடிக்காதா? அப்படிப்பட்டவர்களை சுரைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் சுரைக்காயைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். அதுவும் கல்யாண வீடுகளில் செய்யக்கூடிய பக்குவத்தில் கடலைப் பருப்பு சேர்த்து சுரைக்காய் கூட்டு செய்யுங்கள். இப்படி கூட்டு செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Kalyana Veetu Surakkai Kootu How To Make Bottle Gourd Kootu Recipe

உங்களுக்கு கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கடலைப் பருப்பு - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4 (விதைகளை நீக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பிஞ்சு சுரைக்காய் - 1/4 கிலோ (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த பருப்பு
* தேங்காய் விழுது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, பருப்பை கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, விதைகளை நீக்கிய வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்த பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, மூடி வைத்து மீண்டும் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 7 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 6, 2026, 15:00 [IST]
Desktop Bottom Promotion