3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும்

Posted By:

Muttai Salna Recipe in Tamil: சப்பாத்தி, பூரியை உங்கள் வீட்டில் அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை முட்டை சால்னாவை செய்யுங்கள். இந்த முட்டை சால்னா தனித்துவமான சுவையில் இருக்க காரணம், அதில் அதை சேர்க்கப்படும் மசாலா பொருட்கள்தான். அது என்னவென்பது இந்த ரெசிபியின் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Kaiyendhi Bhavan Muttai Salna Recipe How to Make at Home in Tamil

வழக்கமான உருளைக்கிழங்கு குருமா, தக்காளி குருமா போன்றவற்றை செய்து சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த முட்டை சால்னா வேற லெவலில் இருக்கும். இந்த முட்டை சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா போன்றவற்றுக்கு கூட அட்டகாசமாக இருக்கும். இந்த சால்னாவை செய்வதும் மிகவும் எளிதானதாகும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் முட்டை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் முட்டை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- முட்டை - 3
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
- எண்ணெய் - தாளிக்க

வறுத்து அரைக்க:

- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- தேங்காய் - 1 மூடி
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- முழு மிளகு - 1 டீ ஸ்பூன்
- பட்டை - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

- முதலில் முட்டையின் ஓட்டில் உள்ள அழுக்குகளை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.

- நன்கு பழுத்த தக்காளியை கழுவி விட்டு அதை பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி கொள்ளவும்.

- ஒரு தக்காளியை பொடியாகவும் இன்னொன்றை வறுத்து அரைக்க ஏற்றார் போலவும் நறுக்கி கொள்ளவும்.

- பச்சை மிளகாயை கழுவி இரண்டாக கீறி எடுத்து கொள்ளவும்.

- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ளவும்.

- வெங்காயத்தை தோல் உரித்து கருமை நிற பூஞ்சை இல்லாமல் கழுவி கொள்ளவும்.

-அதில் ஒன்றை பொடிப்பொடியாக நறுக்கவும். மற்றொன்றை நீளவாக்கில் வதக்கி அரைப்பதற்கு ஏற்பவும் நறுக்கி கொள்ளவும்.

- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் சூடானதும் சோம்பு, மிளகு மற்றும் பட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

- பின் வதக்க நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழைந்து வேகும் வரை வதக்கவும்.

- அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி ஆற விடவும்.

- இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

- அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

- அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி நன்கு வேகும் வரை வேக விடவும்.

- பின் அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து நன்று கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

- முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

- எண்ணெய் பிரிந்து வந்ததும், உடைத்து வைத்த முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி, 5 நிமிடங்களுக்கு மூடி வேக விட்டு இறக்கினால் சுவையான முட்டை சால்னா ரெடி!

- இது ரொட்டி, தோசை அல்லது பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 10, 2026, 17:52 [IST]
Desktop Bottom Promotion