ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்

Posted By:

Iyengar Poricha Rasam Recipe in Tamil: எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் இறுதியில் ரசம் சாப்பிட்டால்தான் ஒரு நிறைவான உணர்வு கிடைக்கும். ரசம் என்றாலே பொதுவாக தக்காளி ரசம், மிளகு ரசம் அல்லது பருப்பு ரசம் என்றுதான் செய்வோம். ஒரே மாதிரியான ரசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படினா இந்த மாதிரி ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. ஐயங்கார் ஸ்டைல் ரெசிபிக்கள் என்றாலே சுவை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். அதற்கு இந்த பொரிச்ச ரசமும் விதிவிலக்கல்ல. வழக்கமான ரசம் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இது புது சுவையைக் கொடுக்கும்.

Iyengar Poricha Rasam Recipe How to Make at Home in Tamil

உங்களுக்கு இந்த ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரிச்ச ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைக்க:

- கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- வர மிளகாய் - 4
- கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

- பழுத்த தக்காளி - 4
- பச்சை மிளகாய் - 2 கீறியது
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வறுத்து அரைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நன்றாக வறுத்து ஆறவிடவும். பின்னர் அவற்றை அரைத்துத் தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

- இப்போது நறுக்கிய தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து, கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

- அதனுடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- இதை 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

- பின்னர் கொதிக்கும் கலவையில் அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.

- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி சூடான சாதத்தில் பரிமாறவும்.

- அவ்வளவுதான் சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, September 7, 2026, 12:16 [IST]
Desktop Bottom Promotion