ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்

Posted By:

Hariyali Pulao Recipe in Tamil: ஒரே மாதிரியான தக்காளி சாதமோ, பிரியாணியோ செய்து போரடித்து விட்டதா? ஏதாவது வித்தியாசமாக அதேசமயம் சுவையான பிரியாணி மாதிரியான உணவை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த ஹரியாலி புலாவை செய்து பாருங்கள். இந்த ஹரியாலி புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சுவையான புலாவ் செய்வதற்கும் மிகவும் எளிதானதாகும்.

Hariyali Pulao Recipe How to Make at Home in Tamil

உங்களுக்கு ஹரியாலி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹரியாலி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைக்க:

- 1 கப் புதிய புதினா இலை
- 1 கப் புதிய கொத்தமல்லி இலை
- 2 இன்ச் இஞ்சித் துண்டு (தோல் சீவி நறுக்கியது)
- 5 பூண்டுப் பல்
- 4 பச்சை மிளகாய்

புலாவ் செய்யத் தேவையானவை:

- 1½ கப் நீளமான பாசுமதி அரிசி
- 3 ஸ்பூன் நெய்
- அரை ஸ்பூன் சீரகம்
- 4 கிராம்பு
- 3 முழு ஏலக்காய்
- 5 முழு மிளகு
- 2 இன்ச் பட்டை
-1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ½ கப் பச்சை பட்டாணி
- ½ கப் நறுக்கிய பீன்ஸ்
- ½ கப் நறுக்கிய கேரட்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 பிரியாணி இலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

- அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ¼ கப் தண்ணீரைச் சேர்க்கவும்.

- இதை மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு குக்கரில் மிதமான தீயில் நெய்யைச் சூடாக்கவும்.

- நெய் சூடானதும், சீரகம், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் ஒரு துண்டு பட்டை ஆகியவற்றைச் சேர்த்து பொரிய விடவும்.

- பின்னர் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- அதன்பின் மல்லித் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் பட்டாணி, பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

- காய்கறிகள் பாதி வெந்ததும் அரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு, ஊறவைத்த அரிசியை வாணலியில் சேர்க்கவும்.

- அதனுடன் எலுமிச்சை சாறு, 2 1/2 கப் தண்ணீர், பிரியாணி இலை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- பின்னர் அரைத்த பச்சை மசாலா விழுதைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

- குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

- பின்னர் அடுப்பை அணைத்து பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.

- குக்கரை மூடி கரண்டியை திருப்பி நன்றாக கிளறினால் சுவையான ஹரியாலி புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, August 31, 2026, 20:46 [IST]
Desktop Bottom Promotion