கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்

Posted By:

Goan Chicken Curry Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த கோவா ஸ்டைல் சிக்கன் கறியை செய்து கொடுங்கள்.

Goan Chicken Curry Recipe How to Make at Home in Tamil

இந்த கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த கோவை சிக்கன் கறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த சிக்கன் மசாலாவை செய்து விட்டால் இனி உங்களுக்கு கோவா என்றால் இந்த சிக்கன்தான் நினைவிற்கு வரும்.

உங்களுக்கு கோவா ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவா சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - ½ கிலோ
- பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
- தக்காளி - 3 பெரியது (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வினிகர் - 2 ஸ்பூன்

கோவன் மசாலா விழுது செய்ய:

- இஞ்சி - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 8 பல்
- பட்டை - 1 இன்ச்
- தனியா - 2 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- கிராம்பு - 4
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை:

- ஒரு மிக்சி ஜாரில் மசாலா விழுது அரைக்க தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் மெலிதாக நறுக்கியவெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- அதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து அவை நன்கு குழைந்து வேகும் வரை வதக்கவும்.

- பின்னர் கழுவிய சிக்கனை சேர்த்து, அவை எல்லாப் பக்கங்களிலும் நன்கு சிவந்து வேகும் வரை வதக்கவும்.

- அரை கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.

- மூடி வைத்து, 15 நிமிடங்கள் சிக்கன் நன்கு வேகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- சிக்கன் நன்கு வெந்ததும் இறுதியாக வினிகரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, August 15, 2026, 21:46 [IST]
Desktop Bottom Promotion