3 முட்டையும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த மாதிரி செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..

Posted By:

Egg Pudding Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு புதிய ரெசிபியை ட்ரை செய்வீர்களா? இந்த வாரம் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை, பால் எல்லாம் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் புட்டிங் செய்யுங்கள். இந்த முட்டை புட்டிங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை புட்டிங்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Egg Pudding How To Make a Egg Pudding Recipe

தேவையான பொருட்கள்:

* முட்டை - 3
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* பால் - 1 கப்/250 மிலி (நீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்தது)
* நெய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் வென்னிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் படி கலந்து விட வேண்டும்.
* பின்பு அதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் நெய் தடவி, அதில் முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பின் அதை ஒரு அலுமினியத் தாள் அல்லது தட்டு கொண்டு நீர் உள்ளே புகாதவாறு நன்கு மூடிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியில் அல்லது இட்லி பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இந்த கிண்ணத்தை வைக்கும் அளவில் ஒரு ஸ்டேண்ட்டை வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் கிண்ணத்தை வைத்து வாணலியை மூடி, மிதமான தீயில் வைத்து 40 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* முட்டை கலவையானது நன்கு குளிர்ந்ததும், மூடியை அல்லது அலுமினியத் தாளை நீக்கிவிட்டு, கத்தியால் முனைப் பகுதியை கீறி விட்டு, பின் ஒரு தட்டில் கவிழ்த்துவிட்டு, கிண்ணத்தை நீக்க வேண்டும்.
* இப்போது சுவையான முட்டை புட்டிங் தயார். விருப்பமிருந்தால், இதை 1/2 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து பரிமாறலாம்.

Image Courtesy: Yummy.ph

[ of 5 - Users]
Story first published: Sunday, March 31, 2024, 17:56 [IST]
Desktop Bottom Promotion