ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..

Posted By:

Muttai Pori Podimas Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கின பொரி வீட்டில் நிறைய உள்ளதா? அந்த பொரி நமத்துப்போய் விட்டதா? அதைத் தூக்கிப் போட மனமில்லையா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையுடன் இந்த பொரியை சேர்த்து பொடிமாஸ் செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை பொரி பொடிமாஸ் ஒரு சிறந்த டிபனாக, ஸ்நாக்ஸாக, டின்னராக கூட இருக்கும். முக்கியமாக இந்த பொடிமாஸ் செய்தால், வீட்டில் உள்ளோர் போட்டி போட்டு காலி செய்வார்கள்.

Egg Pori Podimas How To Make Muttai Pori Podimas

உங்களுக்கு இந்த முட்டை பொரி பொடிமாஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பொரி பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 கப்
* பொரி - 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 2
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 கப் பொரியை சேர்த்து 1 நிமிடம் கிளறி, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போய் தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பொரியை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லி மற்றும் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான முட்டை பொரி பொடிமாஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 21, 2026, 20:30 [IST]
Desktop Bottom Promotion