முட்டையும், பாஸ்தாவும் இருந்தா.. நைட் நேரத்துல இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Egg Pepper Pasta Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பாஸ்தா பிடிக்குமா? அப்படியானால் அந்த பாஸ்தாவை செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் முட்டைகள் இருந்தால், பாஸ்தாவுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுங்கள்.

குறிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு சளி பிடித்திருந்தால், மிளகு சற்று அதிகம் சேர்த்து செய்து கொடுங்கள். இதனால் சளியும் முறியும், அவர்களின் பசியும் அடங்கும். இந்த முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Egg Pepper Pasta How To Make a Muttai Podimas Pepper Pasta Recipe

உங்களுக்கு முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 4
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பாஸ்தா - 100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஓரளவு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அந்த மசாலாவை வாணலியின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, பின் அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டைகளை உடைத்து ஊற்றி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட்டு, முட்டை பொடிமாஸ் போன்று செய்ய வேண்டும்.
* பின் மசாலாவுடன் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 6, 2025, 17:53 [IST]
Desktop Bottom Promotion