முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!

Posted By:

Egg Manchurian Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டை பிரியரா? அடிக்கடி முட்டையை வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிட நினைப்பார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மஞ்சூரியன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் முட்டையைக் கொண்டு முட்டை மஞ்சூரியன் செய்து கொடுங்கள். இந்த முட்டை மஞ்சூரியன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இதை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சைடு டிஷ்ஷாகவும் தொட்டுக் கொள்ளலாம்.

Egg Manchurian How To Make Muttai Manchurian Recipe

உங்களுக்கு இந்த முட்டை மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* முட்டை - 6
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்

மேல் மாவிற்கு...

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு டிபன் பாக்ஸில் எண்ணெய் தடவி அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, அதை இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* முட்டை நன்கு குளிர்ந்ததும், கத்தியால் சற்று பெரிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மேல் மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோள மாவு, மைதா ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு துண்டுகளாக்கப்பட்ட முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டையை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சிறிது நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் ப்ரை செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து உயர் தீயில் வைத்து நன்கு கிளறி இறக்கினால், முட்டை மஞ்சூரியன் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 25, 2026, 22:35 [IST]
Desktop Bottom Promotion