பூரிக்கு ஒருவாட்டி கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 பூரி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Kerala Style Chicken Gravy Recipe In Tamil: சன்டே வந்தாலே அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் இந்த நாளில் தான் வாய்க்கு ருசியாக பிடித்ததை சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். அதுவும் சன்டே நாளில் காலையில் வீட்டில் பூரி செய்வதாக இருந்தால், அதற்கு சிக்கன் தான் பெஸ்ட் சைடு டிஷ்ஷாக இருக்கும்.

அதுவும் அந்த சிக்கனை வழக்கமாக செய்யும் கிரேவி போன்று செய்யாமல், கேரளா ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்யுங்கள். இப்படி சிக்கன் கிரேவி செய்யும் போது, அது பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியின் ஸ்பெஷலே மசாலாவை தனியாக அரைத்து செய்வது தான்.

Chicken Gravy How To Make a Kerala Style Chicken Gravy Recipe

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பட்டை - 3 துண்டு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 3
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சிக்கன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிறிது உப்பு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, முதலில் ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 20-25 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சிக்கன் நன்கு வெந்து, எண்ணெய் மேலே மிதக்கத் தொடங்கும். பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 6, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion