கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Chettinad Nandu Masala Recipe In Tamil: தற்போது மழைக்காலம் என்பதால் சளி பிடித்து நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. அப்படி சளி பிடித்திருக்கும் போது நண்டு வாங்கி சமைத்து சாப்பிடும் போது, சளி அனைத்தும் கரைந்து வெளியேறி, நல்ல நிவாரணம் கிடைக்கும் என்பார்கள். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நண்டு பிடிக்குமா? எப்போது நண்டு வாங்கினாலும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை நண்டு வாங்கினால் செட்டிநாடு நண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Chettinad Nandu Masala How To Make Chettinad Crab Masala Recipe

உங்களுக்கு செட்டிநாடு நண்டு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு நண்டு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு..

* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமல்லி - 2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10-12 பல்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கப்பட்டது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நண்டு - 600 கிராம்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு, சோம்பு, வரமல்லி, கசகசா, வரமிளகாய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் நன்கு நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்ம்.
* பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை ஜாரில் உள்ள அரைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இரண்டு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நன்கு கழுவிய நண்டை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* நண்டு நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு நண்டு மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 22, 2026, 13:45 [IST]
Desktop Bottom Promotion