For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்துக்கறியும் முட்டையும் கர்ப்பிணிகளுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Egg
கர்ப்பிணிகள் காலை நேரத்தில் கொத்துக்கறியுடன் முட்டை சாப்பிடுவது கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணிகள் தங்களின் நலனிற்காகவும், குழந்தைகளின் நலனிற்காகவும் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பன்றிக்கறியில் இருந்து செய்யப்பட்ட உணவு (Bacon ) மற்றும் முட்டை போன்ற உணவுகளை காலை நேர டிபன் ஆக சாப்பிடுவது சிசுவின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே தாய்மார்கள் அதிக பதற்றத்துடன் இருப்பார்கள். ஒருவித மன அழுத்தம், இறுக்கம், குழந்தை நல்லபடியாக பிறக்குமோ என்ற பயத்துடன் காணப்படுவார்கள். அதிகப்படியான பயம், மன அழுத்தம் ஆகியவை தாய்க்கு மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். மேலும், கர்ப்ப காலத்தின்போது, கார்டிசால் சுரப்பு குறைந்தால் தொப்புள்கொடி பாதிக்கப்படும். சிசுவுக்கு முறையாக சத்துகள் கிடைக்காது. இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் ஏழு மாத, எட்டு மாத கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன் சத்து 480 மி.கி. அல்லது 930 மி.கி. அளவுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை சாப்பிடுமாறு கூறப்பட்டது. பிரசவம் வரை அவர்கள் முட்டை சாப்பிட்டனர். முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீரானது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. என்று ஆய்வினை மேற்கொண்ட மேரி காடில் தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டையில் முக்கியமாக மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்த ஓட்டம், டென்ஷன், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது. அது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வராமலும் கோலைன் காப்பாற்றுகிறது என்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

English summary

Bacon and eggs could help pregnant women boost their baby's intelligence | கொத்துக்கறியும் முட்டையும் கர்ப்பிணிகளுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Bacon and eggs could help pregnant women boost their baby's intelligence
Story first published: Friday, August 10, 2012, 14:15 [IST]
Desktop Bottom Promotion