Thug Life: தேவர் மகன் முதல் தக் லைஃப் வரை விண்வெளி நாயகன் கமலஹாசன் சந்தித்த பஞ்சாயத்துகள்... இவ்வளவா?

Thug Life: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மொழியை வைத்து மிகப்பெரிய சர்ச்சைகள் நிலவி வருகிறது. உலக நாயகனாக இருந்து தற்போது விண்வெளி நாயகனாக மாறியுள்ள கமலஹாசன்தான் இந்த சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற 'Thug Life' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து அவர் பேசிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

இதைத்தொடர்ந்து கமலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்தின, மேலும் கர்நாடகாவில் 'Thug Life' திரைப்படம் வெளியிடக்கூடாது என்று போராட்டங்களை நடத்தின. இறுதியில் கர்நாடக உயர்நீதி மன்றமும் கமல் அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியது.

Thug Life List of Most Controversial Moments of Kamal Haasan

ஆனால் கமல் அவர்கள் அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று தனது முடிவில் உறுதியாக இருப்பதுடன் கர்நாடகாவில் 'Thug Life' படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார். நம் விண்வெளி நாயகனுக்கு இப்படி சர்ச்சைகளை சந்திப்பதும், அதிலிருந்து மீண்டு வருவதும் இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை அவருடைய திரைப்படங்கள் பல சர்ச்சைகளையும், தடைகளையும் சந்தித்துள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவர் மகன்(1992)

கமலஹாசனின் மாஸ்டர்பீஸ் திரைப்படங்களில் ஒன்றான தேவர் மகன் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது உட்பட ஐந்து தேசிய விருதுகளை இந்த திரைப்படம் வென்றது. ஆனால் குறிப்பிட்ட சமூகத்தை வன்முறை சமூகமாக காட்டியதால் இந்த படம் வெளியான சமயத்தில் சர்ச்சைகளை சந்தித்தது.

ஹே ராம்(2000)

கமலஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கிய ஹே ராம் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்பாகும். ஹே ராம் மூன்று தேசிய விருதுகளை வென்றது, மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் போட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடிப்படையாக இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இது சில அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது, அவர்கள் இத்திரைப்படம் காந்தியை எதிர்மறையான முறையில் சித்தரித்ததாக கூறினர்.

Thug Life List of Most Controversial Moments of Kamal Haasan

விருமாண்டி(2004)

கமல் அவர்களின் அசாத்திய திரைக்தையுடன் வெளியாகி வெற்றியடைந்த விருமாண்டி அதன் தலைப்பால் சர்ச்சைகளை சந்தித்தது. முதலில் இந்த படத்திற்கு சண்டியர் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கட்சித் தலைவர் அந்த தலைப்பு மோசமானது என்றும் சாதி தொடர்பான வன்முறையை ஊக்குவிக்கும் என்றும் கருதினார். இதனால் கமல் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் 2014-ல் இதே பெயரில் வேறொரு படம் வெளிவந்தது, ஆனால் அப்போது எந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Mumbai Express (2005)

அடுத்த வருடமே மீண்டும் கமல் மீண்டும் குறிவைக்கப்பட்டார். இந்த முறையும் படத்தின் தலைப்புக்காக அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. இந்த முறை, தமிழ் ஆதரவு குழுக்கள் தமிழ் படத்திற்கு ஆங்கில தலைப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்தன. அந்த படம்தான் மும்பை எக்ஸ்பிரஸ். கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், கமல் இந்த முறை பின்வாங்க மறுத்து அதே பெயரில் படத்தை வெளியிட்டார்.

மன்மதன் அம்பு(2010)

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'மன்மதன் அம்பு' திரைப்படத்தில் கமல் எழுதிய 'கமல் கவிதை' பாடலின் வரிகளால் சர்ச்சைகள் எழுந்தது. சில வலதுசாரி குழுக்கள் இந்தப் பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கருதின. சென்சார் வாரியம் அதை அனுமதித்த பிறகும் அவர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கினர்.
இறுதியில் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த பாடல் நீக்கப்பட்டது.

விஸ்வரூபம் (2013)

கமலஹாசன் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சர்ச்சை விஸ்வரூபம் திரைப்படத்தால்தான். 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் மீதான சர்ச்சை மிகவும் கட்டுக்கடங்காமல் போனதால், கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி மதச்சார்பற்ற நாட்டுக்கு செல்வதாக பொதுவெளியில் தெரிவித்தார். இந்த திரைப்படம் தலைப்பு முதல் DTH வெளியீடு வரை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

கமல் படத்தை DTH தளத்தில் வெளியிடும் முடிவை எதிர்த்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது தங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர். ஆனால் இப்போது பல திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகிறது. இந்த விஷயத்திலும் கமல் ஒரு தீர்க்கதரிசிதான்.

சில முஸ்லிம் குழுக்கள் விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் கூறி அதைத் தடை செய்யக் கோரின.

பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் ஜனவரி 25, 2013 அன்று உலகளவில் வெளியிடப்பட்டன, ஆனால் இந்தி பதிப்பு பிப்ரவரி 1, 2013 அன்று திரைக்கு வந்தது. இறுதியாக பல்வேறு சிக்கல்களைக் கடந்து இத்திரைப்படம் பிப்ரவரி 7, 2013 அன்று தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.

உத்தம வில்லன்(2015)

கமல்ஹாசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான உத்தம வில்லனும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. தெய்யம் கலையை சித்தரிக்கும் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டபோது, ​​அது பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் எரிக் லாஃபோர்கின் படைப்பிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற செய்தி பரவியது. அதேசமயம் வெளியீட்டிற்கு சிறிது நாளுக்கு முன்பு, கமல் எழுதிய இரணியன் நாடகம் பாடலின் வரிகள் விஷ்ணுவின் பக்தர்களை புண்படுத்துகிறது என்று வெளியீட்டைத் தடை செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் ஒரு மனுவை தாக்கல் செய்தது. மேலும் தயாரிப்பு தரப்பிலிருந்தும் இத்திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து இறுதியாக முதல் நாளின் அனைத்து காட்சிகளும் கேன்சல் செய்யப்பட்டது.

இப்படி சர்ச்சைகளை சந்திப்பதும், அதற்குபின் சாதிப்பதும் நமது விண்வெளி நாயகனுக்கு புதிதல்ல. இந்த 'Thug Life' திரைப்படமும் சர்ச்சைகளைக் கடந்து கமல் அவர்களின் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, June 4, 2025, 23:02 [IST]
Desktop Bottom Promotion