For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலட்சுமணன் - ஊர்மிளாவின் காதல் கதை

இராமாயணத்தில் இராமர் - சீதையின் காதல் கதை அளவிற்கு இணையான காதல் கதை இலட்சுமணன் - ஊர்மிளையின் காதல் கதையாகும். ஆனால் இவர்களின் காதல் கதையையும், இவர்களின் தியாகத்தையும் பலரும் அறியவில்லை. இங்கே இலட்சும

|

இராமாயணத்தில் இராமன், சீதை, இராவணன், இலட்சுமணன், ஆஞ்சநேயர், சுக்ரீவன், மேகநாதன் என அனைவரையும் நாம் அறிவோம். ஏன் கைகேயி கூட இன்னும் நம் நினைவில் இருப்பார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட மிகப்பெரிய தியாகம் செய்த ஒருவரை இராமாயணம் மட்டுமல்ல நாமும் மறந்துவிட்டோம். அவர்தான் சீதையின் சகோதரி இலட்சுமணின் மனைவி ஊர்மிளா.

Ramayana

இராமாயணத்தில் இராமர் - சீதையின் காதல் கதை அளவிற்கு இணையான காதல் கதை இலட்சுமணன் - ஊர்மிளையின் காதல் கதையாகும். ஆனால் இவர்களின் காதல் கதையையும், இவர்களின் தியாகத்தையும் பலரும் அறியவில்லை. இலட்சுமணன் இராமனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபின் ஊர்மிளை அரண்மனையில் ராஜவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தாக நினைத்தால் அது மிகவும் தவறு. இராமாயண போரின் வெற்றிக்கே முக்கிய காரணம் ஊர்மிளையின் தியாகம்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊர்மிளா

ஊர்மிளா

ஊர்மிளா சீதையின் முதல் சகோதரி ஆவார். சீதைக்கு இராமரை கண்டதும் காதல் வந்திருக்கலாம் ஆனால் ஊர்மிளைக்கு அவ்வாறு இலட்சுமணன் மேல் கண்டதும் காதல் வரவில்லை. தன் சகோதரியின் மீது கொண்ட அன்பினால் சீதையை பிரிய மனமில்லாமல் இலட்சுமணனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு அழகிய காதல் கதை ஒளிந்திருந்தது. அதனை அவர்கள் தவிர யாரும் அறியவில்லை.

இலட்சுமணன் - ஊர்மிளா திருமணம்

இலட்சுமணன் - ஊர்மிளா திருமணம்

இராமன் மற்றும் சீதாவின் திருமணத்தின் போதே தன் மற்ற புதல்வர்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினார் சக்கரவர்த்தி தசரதன். இதற்கு ஜனக மகாராஜாவும் ஒப்புக்கொள்ளவே அவர்களின் திருமணத்தோடு இலட்சுமணன் - ஊர்மிளா, சத்ருக்கனன் - ஸ்ருதகீர்த்தி, பரதன் - மாண்டவி திருணமும் கோலாகலமாக நடந்தேறியது. சகோதரிகள் அனைவரும் ஒரே வீட்டிற்கு மணம் முடித்து போவதை எண்ணி மகிழ்ந்தனர்.

கைகேயி சூழ்ச்சி

கைகேயி சூழ்ச்சி

காலமாற்றத்தால் மனம் மாறிய கைகேயி தன் சூழ்ச்சியால் பரதனை அயோத்திக்கு மன்னராக்க வேண்டும் என்பதுடன் இராமனையும் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டுமென மகாராஜா தசரதனிடம் வரம் வாங்கினார். கைகேயியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இராமனும் வனவாசம் செல்ல முடிவெடுத்தார். இராமனை விட்டு எப்பொழுதும் பிரியாத இலட்சுமணன் தன் மனைவியிடம் கூட கேட்காமல் அவரும் வனவாசம் செல்ல ஆயத்தமானார்.

ஊர்மிளாவின் பேராசை

ஊர்மிளாவின் பேராசை

தன் முடிவை ஊர்மிளாவிடம் சொல்ல தயங்கினார் இலட்சுமணன் ஏனெனில் சீதையை போல ஊர்மிளாவும் தன்னுடன் வனவாசம் கிளம்பிவிட்டாள் என்ன செய்வது என்று குழம்பினார். ஆனால் அங்கு இலட்சுமணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஊர்மிளா மகாராணி போல பட்டுடுத்தி நகைகளை அணிந்து கொண்டிருந்தார். அதனை பார்த்து ஆத்திரமுற்ற இலட்சுமணன் உனது சகோதரியும், கணவனும் வனவாசம் செல்லும் நேரத்திலும் இப்படி அலங்கரித்து கொண்டு ராஜவாழ்க்கைக்கு ஆசைப்படுகிறாயே, இனி உன் முகத்திலியே விழிக்கமாட்டேன் எனக்கூறி அங்கிருந்து கோபத்துடன் சென்றார். இலட்சுமணன் அங்கிருந்து சென்றவுடன் தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மனதிற்குள் அழுதார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் திட்டம்

ஊர்மிளாவின் திட்டம்

தன் கணவன் தன் மீது கோபத்துடன் அங்கிருந்து சென்றாலும் அதைத்தான் ஊர்மிளாவும் விரும்பினார். ஏனெனில் தானும் இலட்சுமணனுடன் வனவாசம் சென்றாலோ அல்லது இங்கே அவரை எண்ணி வருத்தத்துடன் இருந்தாலோ இலட்சுமணன் தன் கடமையை முழுமையாக செய்ய இயலாது என்பதை நன்கு அறிவார் ஊர்மிளா. அதனால்தான் தான் ராஜவாழ்க்கைக்கு ஆசைப்படுவது போல நடித்து இலட்சுமணனை கோபம் கொள்ள செய்தார். இனி வனவாசம் முடியும்வரை அவர் ஒரு நொடிகூட தன்னுடைய நினைவு இல்லாமல் அவருடைய கடமையை முழுமனதுடன் செய்வார் என நம்பினார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் தியாகம்

ஊர்மிளாவின் தியாகம்

வனவாசத்தில் இராமன் மற்றும் சீதைக்கு பாதுகாப்பு கவசமாக இலட்சுமணன் இருந்தார் என்றால் இலட்சுமணனுக்கு பாதுகாப்பு அரணாய் இருந்தது ஊர்மிளாவின் பவித்திரமான அன்பு.

இரவும் பகலும் தன் அண்ணனையும் - சீதையையும் காக்க எண்ணிய இலட்சுமணன் தன் தூக்கத்தை 14 ஆண்டுகள் தியாகம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு தூக்கத்தின் கடவுளான நித்ரா தேவி சம்மதிக்கவில்லை. அப்பொழுது தன் கணவனின் கடமைக்காக அவருடைய தூக்கத்தையும் சேர்த்து நான் தூங்குகிறேன் என நித்ரா தேவியிடம் கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார் ஊர்மிளா. தூங்குவது மிகப்பெரிய தியாகமா? என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உணவின்றி நாள் 14 ஆண்டுகள் இலட்சுமணனுடைய தூக்கத்தையும் சேர்த்து தூங்குவது சாதாரண தியாகம் அல்ல. இதனால் அவரின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கக்கூடும் என்பதையும் பொருட்படுத்தாது தன் கணவன் மீது கொண்ட காதலுக்காக அதனை செய்ய முன்வந்தார் ஊர்மிளா.

போர் வெற்றி

போர் வெற்றி

இலங்கையில் நடந்த போரில் இராமனுடைய படைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருந்தவன் இராவணன் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித். அவனை வதைப்பது என்பது இராமனுக்கே இயலாததாய் இருந்தது காரணம் அவன் வாங்கிய வரம் அப்படி. எவன் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனால் மட்டுமே தான் கொள்ளப்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் இந்திரஜித். அதன்படி இலட்சுமணின் தூக்கத்தையும் சேர்த்து ஊர்மிளா 14 ஆண்டுகள் தூங்கியதால் மேகநாதனை கொல்லும் தகுதி பெற்ற ஒரே ஆளாக இலட்சுமணன் இருந்தார். அதனால் மேகநாதனையும் கொன்றார், ஊர்மிளாவின் இந்த தியாகம் மட்டும் இல்லையெனில் இராமனால் போரில் வெல்வது மிகக்கடினமாய் இருந்திருக்கும்.

இலட்சுமணன் மனமாற்றம்

இலட்சுமணன் மனமாற்றம்

போரில் வெற்றியடைந்து அயோத்தி திரும்பிய இராமன் மற்றும் சீதையை எல்லோரும் கோலாகலமாக வரவேற்றார்கள். இலட்சுமணன் ஊர்மிளா மேலிருந்த கோபத்தால் அவரை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். தன் சகோதரியின் முகத்தில் கவலை ரேகை ஓடுவதை கண்ட சீதை அதற்கான காரணத்தை கேட்டபோது இலட்சுமணனை வனவாசம் அனுப்ப தான் அரங்கேற்றிய நாடகத்தையும், அவருக்குக்காக 14 ஆண்டுகள் உறங்கியதையும் கூறிய ஊர்மிளாவை ஆயிரம் சீதை சேர்ந்தாலும் உன் ஒருத்தியின் பவித்திரத்திற்கும், தியாகத்திற்கும் ஈடாகாது என கண்ணீர் விட்டு அணைத்தார் சீதை. உண்மையை அறிந்த இலட்சுமணன் தன் தவறை உணர்ந்து ஊர்மிளாவிடம் மன்னிப்பு கோரினார்.

ஊர்மிளாவின் சிறப்பு

ஊர்மிளாவின் சிறப்பு

இராமன் விஷ்ணுவின் அவதாரம், சீதையோ தேவி இலட்சுமியின் அவதாரம், இலட்சுமணனோ ஆதிசேஷனின் அவதாரம். அவர்கள் தங்களின் கடமையை செய்வதற்காக செய்த தியாகங்களை காட்டிலும் மனித பிறவியான ஊர்மிளா தன் கணவர் மீது கொண்ட காதலுக்காக செய்த தியாகம் மிகப்பெரியது. அந்த 14 ஆண்டுகளும் அரண்மனையின் எந்தவித சுகபோகங்களையும் அனுபவிக்காமல் தன் கணவரை போலவே விழித்திருக்கும் நேரத்தில் வனவாச வாழ்க்கையே வாழ்ந்தார் ஊர்மிளா. இராமன் மற்றும் சீதாவின் காதலுக்கு எந்தவிதத்திலும் குறையாத காதல் இலட்சுமணன் மற்றும் ஊர்மிளாவிற்கு இடையேயான காதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown facts of Urmila sacrifice towards Laxmana

Urmila is the wife of Laxmana and the sister of Sita. Her sacrifice is one of the important reasons for Lord Rama's victory against Ravana. Because of her sacrifice only Laxmana killed Indrajith in a war.
Desktop Bottom Promotion