Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Ayudha Pooja 2026: தென்னிந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தான் ஆயுத பூஜை. இந்நாளில் தான் சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை என்பது நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளையும் உபகரணங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.

Ayudha Pooja 2026 Date Auspicious Time And Why Do We Celebrate Ayudha Pooja

நவராத்திரியின் 9 ஆம் நாளில் கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை அன்று வீட்டில் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தும் சாதனங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பூஜைகளை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் நிறைய பேர் இந்த ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம், வரலாறு எதுவும் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு மகாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வும் ஒரு காரணம் என்பது தெரியுமா? இப்போது ஆயுத பூஜை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் என்ன என்பதைக் காண்போம்.

ஆயுத பூஜை கொண்டாட காரணம்

மகிஷாசுரன் என்னும் கொடிய அசுரனை வதம் செய்வதற்காக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்றிணைந்து மகாசக்தியாக உருமாறி, அந்த அசுரனை எதிர்த்து போரிட்டனர். இந்த போர் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. இதில் நவராத்திரியின் 8 ஆவது நாளில் தான் துர்கா தேவிக்கு மும்மூர்த்திகளின் வரங்களுடன், பல ஆயுதங்களும் கிடைத்தன. அந்த ஆயுதங்களை போருக்கு கொண்டு செல்லும் முன், துர்கா தேவியின் 9 ஆவது நாளில் அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்தார்.

இப்படி துர்கா தேவி தனது ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை நினைவுகூறும் வகையிலும், நவராத்திரியின் 9 ஆம் நாளில் வீட்டில் உள்ள கருவிகள் மற்றும் தொழில் சார்ந்த பொருட்களை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம், பழங்காலம் முதலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆயுத பூஜைக்கும், மகாபாரத்துக்கும் உள்ள தொடர்பு

சூதாட்டத்தால் நாட்டை இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடியும் வரை தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். அவர்களின் வனவாச வாழ்க்கை முடிந்து வந்து மீண்டும் அந்த ஆயுதங்களை எடுக்க வந்த போது, அந்த ஆயுதங்கள் எவ்வித சேதமும் இல்லாமல் அப்படியே இருந்ததைக் கண்டு வியந்தனர்.

ஆயுதங்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்ததைக் குறிக்கும் விதத்தில் அந்த ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பின் அவற்றை பயன்படுத்தினர். அதன் பின்னர் தான் மகாபாரதப் போர் நடந்தது மற்றும் அந்த போரில் பாண்டவர்களும் வெற்றி பெற்றனர். இதன் நினைவாகவே ஆயுத பூஜை நாளில் தங்களின் வாழ்க்கைக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் கருவிகளை தெய்வமாக கருதி அவற்றிற்கு பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்

2026 ஆம் ஆண்டின் ஆயுத பூஜை மற்றும் சரவஸ்வதி பூஜை அக்டோபர் 19 ஆம் தேதி வருகிறது. அதுவும் திங்கட்கிழமை வருவதால், ராகு காலம் நேரமான காலை 7:30 முதல் 9:00 வரை, குளிகை 01.30 முதல் 3.00 மணி வரை, எமகண்டம் 10.30 முதல் 12.00 மணி வரை என்பதால், மதியம் 3 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 18, 2026, 17:33 [IST]
Desktop Bottom Promotion