For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு

By Mayura Akilan
|

Tamil New Year
சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

திருமகளுக்கு வரவேற்பு

தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி முதல் நாளே வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.

வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.

பஞ்சாங்கம் படித்தல்

சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்கி வந்து அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். இது தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும்.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

அறுசுவை உணவு

தமிழ் புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும்.

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.தமிழ் புது வருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

இளவேனிற் காலம்

சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

English summary

Tamil New year Celebration

Tamil New Year Day or Varusha Pirappu or Tamil Puthandu is an important Hindu Tamil festival celebrated by Tamil speaking Hindus. Sun is denoted as the source of energy. Sun becomes exalted when it transits into Aries and it obtains its full potential during this period. Therefore offer your prayers to sun god. The power of sun transform the Tamil month Chithirai as an auspicious month and the Tamil New year day as the most eventful day.
Desktop Bottom Promotion