வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடத்துல துடைப்பத்தை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டில் கஷ்டம் தான் அதிகரிக்கும்..

Vastu Tips In Tamil: நம் அனைவரது வீட்டிலுமே வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம் இருக்கும். என்ன தான் துடைப்பம் குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்பட்டாலும், அந்த துடைப்பமானது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் துடைப்பமானது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட துடைப்பத்தை ஒருவர் தங்கள் வீடுகளில் வைக்கும் போது சரியான இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். தவறான திசையில் அல்லது இடத்தில் துடைப்பத்தை வைத்தால், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முக்கியமாக துடைப்பத்தை தவறான இடத்தில் வைப்பதால், குடும்பத்தில் பிரச்சனைகள் மட்டுமின்றி, வீட்டில் பணம் சேர்வதிலும் தடை ஏற்படும்.

Vastu Tips: Where To Keep A Broomstick At Home In Tamil

எனவே வீட்டில் துடைப்பத்தை சரியான இடத்தில் வைக்க வேண்டியது முக்கியம். உங்களுக்கு துடைப்பத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது குறித்து தெரியாதெனில், இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் இதுக்குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

துடைப்பம் விஷயத்தில் செய்யக்கூடாத தவறுகள்

வீட்டில் பயன்படுத்தும் துடைப்பமானது உடைந்திருந்தால் அல்லது சேதமடைந்திருந்தால், அதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மிகவும் பழைய துடைப்பத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். உடைந்த அல்லது சேதமடைந்த துடைப்பத்தை தூக்கி எறிவதாக இருந்தால், அதை சனிக்கிழமைகளில் குப்பையில் போடுங்கள். மேலும் துடைப்பத்தை புதிதாக வாங்க நினைத்தால், அதை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளைத் தவிர, மற்ற நாட்களில் வாங்கலாம்.

உடைந்த துடைப்பத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது?

வீட்டில் பயன்படுத்தும் துடைப்பம் உடைந்து போயிருந்தால், அல்லது மிகவும் பழையதாக இருந்தால், அவற்றை உடனே மாற்ற வேண்டும். ஏனெனில் இம்மாதிரியான சேதமடைந்த துடைப்பத்தை தொடர்ந்து வீட்டில் பயன்படுத்தும் போது, வீட்டில் வறுமை அதிகரிக்கும் மற்றும் பணப் பிரச்சனை, குடும்ப பிரச்சனை என வீட்டில் பிரச்சனைகள் அடுத்தடுத்து சந்திக்க நேரிடும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பெருக்காதீர்கள்

எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாலை வேளையில் தான் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவார். அப்படி வருகை தரும் போது, வீட்டை பெருக்கிக் கொண்டிருந்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, பண தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும். அதேப் போல் மாலை வேளையில் குப்பையை வீட்டில் இருந்து தூக்கிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வறுமை வாட்டி எடுத்துவிடும்.

துடைப்பத்தை அவமதிக்காதீர்கள்

துடைப்பமானது லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. எனவே எப்போதும் துடைப்பத்தை ஒருவர் காலால் மிதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இதன் விளைவாக கடுமையான பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

துடைப்பத்தை எங்கு வைப்பது நல்லது?

வீட்டில் துடைப்பம் மற்றும் மாப்பை வைக்க சிறந்த திசை எப்போதும் வடமேற்கு அல்லது மேற்கு மூலை தான். இந்த இடத்தில் துடைப்பத்தை வைக்கும் போது, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும். ஆனால் எப்போதும் துடைப்பத்தை வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசை அல்லது பூஜை அறைக்கு அருகில் வைத்து விடாதீர்கள். இல்லாவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் தான் அதிகரிக்கும்.

துடைப்பத்தை எங்கு வைக்கக்கூடாது?

மேலே குறிப்பிட்டுள்ள திசைகளைத் தவிர, துடைப்பத்தை வீட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அதில் வீட்டில் வடகிழக்கு மூலையில் மற்றும் வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது. இது தவிர துடைப்பத்தை மொட்டைமாடியில் வைக்கக்கூடாது. இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் பண இழப்புக்கள் ஏற்படும். மேலும் படுக்கை அறையிலும், பூஜை அறையிலும், படிக்கும் அறையிலும் துடைப்பத்தை வைக்கக்கூடாது.

துடைப்பத்தை எப்படி வைக்க வேண்டும்?

துடைப்பத்தை படுக்கை அறையில் மட்டுமின்றி, சமையலறையிலும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் மற்றும் உணவுப் பொருட்கள் குறைந்து தட்டுப்பாடு ஏற்படும். மேலும் துடைப்பத்தை எப்போதும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கண்களில் படாதவாறு வைக்க வேண்டும். முக்கியமாக துடைப்பத்தை எப்போதும் படுக்க வைத்திருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 12, 2023, 18:50 [IST]
Desktop Bottom Promotion