For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையை சுத்தமாக்கும் வினிகர் !

By Mayura Akilan
|

Clean Kitchen
சமையலறை என்பது தண்ணீரும், எண்ணெயும் அதிகம் புழங்கும் இடம். சரியாக கவனிக்காமல் விட்டால் பிசுபிசுப்பு அதிகமாகிவிடும். எனவே சமையல் முடிந்த உடன் சமையலறையை அடிக்கடி கழுவி சுத்தமாக்க வேண்டியதும் இல்லத்தரசியின் கடமை.

சமையலறையில் உள்ள எவர்சில்வர் காஸ் ஸ்டவ், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் என்று ஆகிவிடும்.

ஸ்ப்ரே பாட்டிலில் அரை டம்ளர் தண்ணீருடன் சம அளவு வினிகர் ஊற்றி கலந்து கொள்ளவும். சமையலறையில் எண்ணெய் தெறித்துள்ள இடங்களில் இதை ஸ்ப்ரே செய்து ஊறவைத்து கழுவினால் சமையலறை எண்ணெய் பிசுக்கு நீங்கி பளிச் சுத்தமாகும். பின்னர் உலர்ந்த துணியைக் கொண்டு சமையலறையை துடைக்கவும்.

பித்தளை சாமான்கள்

பித்தளைச் சாமான்களை வாரம் ஒருமுறையாகவது துலக்கி வைக்கவேண்டும். இல்லையெனில் கறுத்துவிடும். வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து பித்தளைப் பாத்திரங்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், பாத்திரங்கள் மின்னும்.

கண்ணாடி சாமான்கள்

கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும். ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

காஃபி மேக்கர்

எலக்ட்ரிக் காஃபி மேக்கர் நீண்ட நாட்கள் ஆனதும், உட்புறம் உப்பு படிந்து அடைப்பு ஏற்பட்டுவிடும். இதனால் டிகாஷன் இறங்குவதில் தாமதம் ஏற்படும். இதற்கு தண்ணீரில் வினிகர் கலந்து காஃபி மேக்கரை ஆன் செய்யவேண்டும். டிகாசன் இறங்குவதுபோல வெந்நீர் வரும். இரண்டு முறை இவ்வாறு செய்தால் அடைப்பு நீங்கும்.

கறைபோக்கும் வினிகர்

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

டைனிங் டேபிள் புதிதாகும்

டைனிங் டேபிளில் பொருட்கள் கொட்டுவதால் சில சமயம் துர்நாற்றம் அடிக்கும். இதனை நீக்க வினிகரை மிருதுவான துணியில் கொட்டி அதை வைத்து டைனிங் டேபிளை துடைத்தால் வாசனை போகும். டேபிள் புதிது போல பளபளக்கும்.

சிங்க் பளிச் என்றாக

அதிகம் தண்ணீர் உபயோகிக்கும் இடம் கிச்சன் சிங்க். கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலும் பாசி பிடித்துவிடும். இதனால் பாக்டீரியாக்களின் கூடாரமாகிவிடும். இதனை வினிகரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும். சிங்க் பளிச் பளிச் தோற்றம் தரும்

Story first published: Friday, March 16, 2012, 17:36 [IST]
Desktop Bottom Promotion