இந்த மாதிரி ஆளுங்களுக்கு மாரடைப்பு வர நிறைய வாய்ப்பிருக்காம்... உங்களுக்கு இருக்கா-ன்னு பாருங்க..

Heart Attack In Tamil: உலகளவில் தற்போது மாரடைப்பால் தான் நிறைய பேர் இறந்து வருகிறார்கள். மாரடைப்பானது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். ஏனெனில் தற்போதைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் அப்படி மோசமாக உள்ளது.

அதோடு பணிபுரியும் இடத்திலும் வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பலர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக கண்ட உணவுகளை கட்டுப்பாடின்றி சாப்பிட நேரிடுகிறது. அதனால் இதயம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலும் மோசமாக பாதிக்கப்படுகிறது.

Which People Are More Prone To Heart Attack In Tamil

இது தவிர ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்பவர்களுக்கும், ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருபவர்களும் வயது அதிகரிக்கும் போது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

ஏனெனில் என்ன செய்தாலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட நபர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். நீங்களும் இந்த பட்டியலில் உள்ளீர்களா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து, உஷாரா இருங்கள்.

குறிப்பிட்ட வயதினர்

ஒருவருக்கு வயது அதிகரிக்கும் போது, அவரது உடலுறுப்புக்கள் படிப்படியாக பலவீனமாகும். ஒரு கட்டத்தில் உறுப்புகள் செயல்படுவதை நிறுத்திவிடும். அப்படிப்பட்ட உறுப்புக்களில் ஒன்று தான் இதயம். அதுவும் 45 வயதிற்கு பிறகு ஆண்களும், 55 வயதிற்கு பிறகு பெண்களும் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த வயதினர் இதய ஆரோக்கியத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

நாள்பட்ட நோய்கள்

உடலில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்தால், அதுவும் இதய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, மாரடைப்பு வரும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை கொண்டவர்கள், இதய ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

உடல் பருமன்

தற்போது உடல் பருமனால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் பருமனானது பலவிதமான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக உடல் பருமனைக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, தானாக இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வரத் தொடங்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

பரம்பரை

ஒருவரது பரம்பரையில் ஒன்றிற்கு மேற்பட்டோருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு மரபணுக்கள் காரணமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மருத்துவரை அணுகி இதய ஆரோக்கியத்தை சரிவர கவனித்து வர வேண்டும்.

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை

உடற்பயிற்சியில் ஈடுபடாமல், 24 மணிநேரமும் உட்கார்ந்தவாறே இருப்பது, மாரடைப்பை வரத் தூண்டும் முக்கிய காரணிகளுள் ஒன்றாகும். உதாரணமாக, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வோர், எப்போதும் உட்கார்ந்தவாறே இருப்பதால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகள் சரியாக உடலில் ஜீரணிக்கப்படாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் உடலில் அப்படியே படிந்துவிடுகிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உள்ளது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, November 6, 2023, 13:15 [IST]
Desktop Bottom Promotion