For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை வலுவாக்கும் பாதாம் எண்ணெய்

By Mayura Akilan
|

Almonds
பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது. எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.

பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு" என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.

செயல்திறன் மிக்க சத்துக்கள்

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி - 6 பாதாமில் காணப்படுகின்றன. வைட்டமின் பி - 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது

பாதாம் எண்ணெய்

பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது.சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

செரிமானக் கோளாறுகளை நீக்கும்

நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.

இதயத்தின் நண்பன்

ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி - ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

English summary

Almonds are not fattening! | வீரியம் நிறைந்த பாதம் பருப்புகள் !

It is a myth that almonds will make you fat, provided you don't consume them in excess. It is said that almonds are the most nutritious of all nuts. Infact, when eaten in moderation, almonds are can be quite beneficial for health, simply because they are full of good nutrients. Because almonds contain calcium, potassium and magnesium, they help in regulating blood pressure and prevent osteoporosis.
Story first published: Thursday, September 22, 2011, 18:15 [IST]
Desktop Bottom Promotion