ஆண்களே! இந்த பிரச்சனைகளை அசால்ட்டா எடுத்துக்காதீங்க.. அது புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்...

Cancer Symptoms In Men In Tamil: உலகளவில் இதய பிரச்சனைகளுக்கு இணையாக புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் ஏசிஎஸ் பத்திரிக்கையின் மதிப்பீட்டின் படி, 5-ல் 1 ஆணுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது. சொல்லப்போனால் உயிரைப் பறிக்கும் இந்த கொடிய நோயின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆண்களிடையே அதிகரித்து வருகின்றன.

மேலும் பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன தான் பெண்களும் ஆண்களுக்கு இணையாக புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், ஆண்களிடையே புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளன.

Cancer Symptoms In Men Crucial Signs Of Cancer Men Should Not Ignore

புதிய புள்ளி விவரங்களின் படி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த புற்றுநோய் கண்டறிதலில் ஆண்களின் எண்ணிக்கை 167,917 இலிருந்து 180,877 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கம் தான் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், புற்றுநோயை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், குணப்படுத்திவிட முடியும்.

கீழே ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில புற்றுநோயின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போம்.

கழிவறை பழக்கத்தில் மாற்றங்கள்

நீங்கள் திடீரென்று அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறீர்களா அல்லது சிறுநீர், மலம் கழிக்கும் போது வலியை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் மலம் அல்லது சிறுநீரில் இரத்தம் கசிந்தாலோ, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கை தொடர்ந்து அனுபவித்தாலோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அஜீரண கோளாறு

தொண்டை அல்லது நெஞ்சு பகுதியில் கடுமையான எரிச்சலுடன் வலியை சந்தித்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். நிறைய பேர் காரமான உணவுகளை உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் எது சாப்பிட்டாலும் இப்படி ஏற்பட்டாலோ மற்றும் விழுங்குவதில் சிரமத்தை சந்தித்தாலோ, தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது உணவுக்குழாய், தொண்டை அல்லது வயிறு தொடர்பான புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

வாயில் மாற்றங்கள்

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் தொடர்பான புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் வாயில் வெள்ளை நிற திட்டுகள் அல்லது நாக்கில் வெள்ளை நிற திட்டுகள், வாய் புண், நாக்கில் புண், உதடுகள் மற்றும் கன்னங்களில் காயங்களை சந்திப்பதோடு, இரத்தக்கசிவு, உணர்வின்மை போன்றவற்றை சந்தித்தால், அது வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகினால் சிகிச்சை அளித்து குணமாக்க முடியும்.

விவரிக்க முடியாத எடை இழப்பு

பொதுவாக வயது அதிகரிக்கும் போது ஒருவரது உடல் எடையை பராமரிப்பது என்பது கடினம். அதுவும் காரணமின்றி ஒருவரது உடல் எடை குறையத் தொடங்கினால், அதைக் கண்டு சந்தோஷப்படாமல், உடனே உடலை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் திடீர் உடல் எடை இழப்பு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அசாதாரண கட்டிகள்

பொதுவாக உடலின் எந்த பகுதியில் கட்டிகள் இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்படி கட்டிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகு, அது என்னவென்பதை சோதனை செய்து பார்த்துவிட வேண்டும். அசால்ட்டாக இருந்தால், பின் அந்த கட்டிகள் அப்படியே புற்றுநோய் கட்டிகளாக மாறி, நிலைமையை மோசமாக்கிவிடும்.

அதுவும் ஆண்கள் தங்கள் விரைகளில் அசதாரண கட்டிகளின் வளர்ச்சியை கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இப்படியான கட்டி டெஸ்டிகுலர் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே ஆண்கள் வயது அதிகரிக்கும் போது தங்கள் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்தினால், புற்றுநோயை ஆரம்பதிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு, குணமாகலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, November 6, 2024, 13:03 [IST]
Desktop Bottom Promotion