For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலை அலையாய் அழகான கூந்தல் பெற…..

By Mayura Akilan
|

Hair Care
நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை. தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவதோடு மட்டுமல்லாது, கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி. தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.

மூன்று வகை கூந்தல்

முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். கூந்தலை எண்ணைப்பசை மிகுந்த கூந்தல், வறண்ட கூந்தல், சாதாரண கூந்தல் என இயற்கையிலேயே மூன்று வகை உண்டு.

எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும். ஒரு சிலருக்கு எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும். எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.

கருமையான கூந்தல் அழகு

பச்சைபயறு,பூலாங்கிழங்கு இரண்டையும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளிக்க தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படாது. முடி உதிராது. இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும். முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அதனை தலையில் பூசி ஊறவைத்து 15 நிமிடம் கழித்து தலையை அலச கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

ஊறவைத்த வெந்தயம்

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் வெந்தயம் சிறந்தது. வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து அதனை மைய அரைத்து தலையில் அரைமணிநேரம் ஊறவைத்து அலசினால் உடல் சூடு போகும். கூந்தல் உதிர்வது குறையும்.

மருதாணி மகத்துவம்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவி வர நன்றாக முடி வளரும்.

செம்பருத்தி கருவேப்பிலை

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் நன்றாக தேய்த்து அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கருவேப்பிலை ரெண்டு கொத்து, சின்ன வெங்காயம் நான்கு எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

அலையான கூந்தல்

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்னர் அதனை மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

ரசாயன ஷாம்புகள்

எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும் இதே முறையை பின்பற்ற வேண்டும். அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினாலும் முடி உதிரும். அதே சமயம் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டாலும் முடி உதிர்வது தடுக்கப்படும்.

English summary

Hair care tips for Home Remedies | அலை அலையாய் அழகான கூந்தல் பெற…..

Like your skin, your hair reflects your overall health, and the effect of the weather on it. The hair strands, like your nails, have no living cells. However, it is those strands that we cherish. The living part of the hair is under the skin – its roots. The roots are pampered, but even the strands have to be taken care of if you want them to be healthy and look good.
Story first published: Sunday, February 12, 2012, 12:53 [IST]
Desktop Bottom Promotion