பனியால் உதடுகள் அதிகமா வறண்டு வெடிப்புகள் ஏற்படுதா? அப்ப இத தினமும் நைட் தடவுங்க..

Dry Lips Remedy In Tamil: பொதுவாக குளிர்காலம் வந்தாலே, சரும வறட்சி, உதடு வறட்சி போன்றவற்றால் வலியை உண்டாக்கும் அளவிலான வெடிப்புகளை சந்திக்க நேரிடும். என்ன தான் காலநிலை குளிர்ச்சியாக இருந்தாலும், வறண்ட காற்றின் காரணமாக சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்குவதால், இப்படியான வறட்சியை சருமத்திலும், உதடுகளிலும் சந்திக்க நேரிடுகிறது.

அதுவும் தற்போது பனி மழையைப் போன்று கொட்டுகிறது. இப்படி அதிகமாக பனிப் பொழிவதால், வழக்கத்தை விட கூடுதலாக வறட்சியை மட்டுமின்றி, சருமத்தில் வெடிப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில் உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்கவும், வலிமிக்க வெடிப்புக்களை சரிசெய்து, உதடுகளை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள வேண்டுமா?

Dry Lips Remedy Top 5 DIY Lip Masks For Chapped Lips During Winter

அப்படியானால் கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டில் உள்ள ஒருசில விலை மலிவான பொருட்களைக் கொண்டே உதடுகளுக்கு பராமரிப்பு கொடுங்கள். கீழே உதடுகளில் உள்ள வறட்சியை போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கற்றாழை ஜெல்

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இது உதடுகளில் உள்ள வெடிப்புக்களையும், வறட்சியையும் போக்குவதில் வல்லது. அதற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை உதடுகளில் அப்படியே தடவலாம் அல்லது அதை பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்தும் தடவலாம். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் மட்டுமின்றி, பகல் வேளையில் 2-3 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. தேங்காய் எண்ணெய்

எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெயாகும். இந்த எண்ணெயை உதடுகளுக்கு தடவும் போது, அது உதடுகளுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி, குளிர்காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியையும், வெடிப்புக்களையும் தடுக்கிறது. அதற்கு தேங்காய் எண்ணெயை நேரடியாக உதடுகளில் தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து உதடுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவலாம். இப்படி உதடுகளை ஸ்க்ரப் செய்யும் போது, உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

3. தேன்

தேன் அதிக மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இதைக் கொண்டும் ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, உதடுகளில் நேச்சுரல் லிப் பாம் போன்று பயன்படுத்தலாம். இதனால் உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடனும், அழகாகவும் இருக்கும்.

4. க்ரீன் டீ பேக்குகள்

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உதடுகளில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியை தடுப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கும். அதற்கு க்ரீன் டீ தயாரித்த பின் அந்த பேக்கை சிறிது நேரம் உதடுகளில் வையுங்கள். இப்படி செய்யும் போது, உதடு வறட்சியால் சந்திக்கும் வலிமிக்க வெடிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5. கொக்கோ பவுடர்

கொக்கோ பவுடரும் உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்கி, உதடுகளின் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். அதற்கு 2 ஸ்பூன் ஆலிவ் வேக்ஸ், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் கொக்கோ பவுடர், ஜொஜோபா ஆயில் மற்றும் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். இந்த நேச்சுரல் லிப் பாம்மை தினமும் இரவு மட்டுமின்றி, பகல் வேளையிலும் அடிக்கடி தடவி வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடனும், அழகாகவும் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, January 24, 2026, 20:19 [IST]
Desktop Bottom Promotion