விநாயகர் சதுர்த்திக்கு எந்த மாதிரி பிள்ளையார் வாங்கினால் யோகம் பெருகும்?


நாளைக்கு விநாயகர் சதுர்த்தி. இன்னைக்கே பாதி பேர் லீவு போட்டுட்டு பூஜை பொருட்கள், கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருள்கள், வாழை மரம் என ஷாப்பிங் லிஸ்ட் தயாரித்துக் கொண்டு, கடைவீதிக்குக் கிளம்பியிருப்பீர்கள். அந்த லிஸ்ட் மிக முக்கியமாக இடம் பெற்றிருப்பது விநாயகர் சிலையும் தான். நம்முடைய வீட்டுக்குத் தகுந்தாற்போல், சிறியதாக ஒரு சிலையை வாங்கி வைத்து பூஜை செய்வோம். அப்படி பிள்ளையார் சிலை வாங்கும்போது, ஏனோதானோவென்று வாங்கக் கூடாது. அதற்கென சில விஷயங்கள் உண்டு.அதைப் பார்த்து தான் வாங்க வேண்டும்.

மார்க்கெட் முழுவதும் கலர் கலராக அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டு பிள்ளையார் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். நமக்கும் அதைப் பார்த்ததும் உடனே வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதில் கவனித்து வாங்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கான பண்டிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இந்த கணேச சதுர்த்தியும் ஒன்று. இது விநாயகருடைய பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் சிலையை வைத்து அலங்காரங்கள், பூஜை எல்லாம் செய்யப்படும். அதோடு இந்த பண்டிகை முடிந்துவிடுவதில்லை. அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் தொடர்ந்து அந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்படும். அதற்கடுத்ததாக, இந்த சிலைகணை கிணறு, குளம், ஏரி, ஆறு, கடல் என ஏதாவது நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைத்து விடுவார்கள்.

சிலை வாங்குதல்

அவரவர் சக்திக்கு ஏற்ப சிறியதாகவோ பெரிதாகவோ எல்லோருமே வீடுகளுக்கு பிள்ளையார் சிலை வாங்குவோம். அப்படி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

நிற்கும் (அ) உட்கார்ந்த பிள்ளையார்

பிள்ளையாரைப் பொருத்தவரையில் ஏராளமான போஸ்களில் நிறைய மாடல்களில் செய்து வைத்திருப்பார்கள். நமக்கே குழம்பி விடும் எதை வாங்குவது என்று. அதனால் குழம்பாமல் இதை கவனியுங்கள். வீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் படி வாங்குங்கள். அதுதான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடமென்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள்.

அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால், செல்வ வளம், பொருளாதாரம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரயச் செலவுகள் குறையும். நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால், தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தும்பிக்கை இருக்கும் திசை

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பிள்ளையாரின் தும்பிக்கை தான். பிள்ளையார் என்றாலே தும்பிக்கை தானே பிரதானம். அதனால் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாம் வாங்கும் பிள்ளையாரின் தும்பிக்கை வலப்புறமாக திரும்பியிருக்கிறதா, இடப்புறமாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். மிக சிறிய பிள்ளையார் சிலையில் பெரும்பாலும் நடுநிலையாகக் கூட இருக்கும். அப்படி இருப்பதை வாங்கக் கூடாது. இடதுபுறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குங்கள்.

கொழுக்கட்டை ஏந்திய எலி

பிள்ளையாரின் வாகனம் எலி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிள்ளையார் சிலை வாங்கும் போது இந்த எலியை நாம் வாங்க மறந்துவிடுகிறோம். அப்படி எலியையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால், எலி கையில் கொழுக்கட்டையை கையில் வைத்திருக்கும்படி வாங்குங்கள்.

எதில் செய்யப்பட்டது?

நல்ல களிமண்ணால் செய்தது என்றால் மிகச்சிறப்பு. இப்போது நிறைய மெட்டீரியல்களில் செய்யப்படுகின்றன. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கெமிக்கல்கள் கலந்ததாக இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் தான் களிமண் பிள்ளையார் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மற்றொரு விஷயம். மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக் கூடாது. ஏன் நம் வீட்டு பூஜையறையிலேயே அதை வைத்திருக்கக் கூடாது.

பிள்ளையார் நிறம்

பிள்ளையாரைப் பொருத்தவரை ஏராளமான மின்னும் வண்ணங்களில் தயார் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. ஆனால் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். அது உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கும்.

Have a great day!
Read more...

English Summary

here we are giving some tips to buy an idol of ganesha. keep these things in mind