தமிழ் திருமண சடங்குகளின் முக்கியத்துவம்...!

Subscribe to Boldsky

எந்த ஒரு நாட்டிலும், முறையிலும் இல்லாத வண்ணம், தமிழ் முறை திருமணங்கள் ஓர் திருவிழாவை போல கோலாகலமாக, சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து ஓர் மாதம் முழுக்கக் நடக்கும் வகையில் அமைகின்றது.

காதலை மிஞ்சும் நிச்சயித்த திருமணங்கள், ஓர் நெகிழ்ச்சியான தருணம்!!!

அதற்கு காரணம், எண்ணற்ற திருமண சடங்குகள் உள்ளடங்கி இருப்பது தான். திருமணமே, நாளுக்கு முந்தைய தினத்தில் தொடங்கி, அதற்கு அடுத்த நாள் வரை தொடரும். மாப்பிளை புறப்படுதல், பெண் புறப்படுதலில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை இந்த திருமண சடங்குகள் நடைபெறுகின்றன.

திருமணத்திற்குப் பின் எழும் ஏழு "எழரை"கள்!

தமிழ் முறை திருமணத்தில் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அரசாணிக்கால், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம் என்று பல சடங்குகள் இருக்கின்றன. ஆனால் இன்று, இதில் பெரும்பாலான சடங்குகள் நடைபெறுவதில்லை. சரி, இனி நாம் மறந்த திருமண சடங்குகள், அதன் முக்கியத்துவங்கள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மாப்பிள்ளை அழைப்பு

மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண்வீட்டார் மேள தாளத்தோடு வரவேற்பார்கள். அங்கு மாப்பிளை தோழனாக வருபவர், மாப்பிளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை மணவறைக்கு அழைத்துச் செல்வார்.

பெண் புறப்படுதல்

பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்க வேண்டும்.

அரசாணைக்கால்

பண்டையக் காலங்களில் திருமணத்திற்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனால் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும் என்பதனால், அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது.

அங்குரார்ப்பணம்

வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து, அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல, இத்தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது.

இரட்சாபந்தனம் (காப்புக்கட்டுதல்)

தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). பீடை, பிணி அணுகாமலும் இருக்க வேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.

கன்னிகாதானம் (தாரைவார்த்துக் கொடுத்தல்)

மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். எல்லா வளமும் பெற்று இந்த ஜோடி நன்கு வாழ வேண்டும் அன்று வாழ்த்துவர்.

தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்

"மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்"

ஓம்! பாக்கியவதியே' யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று இந்த மந்திரத்திற்கு பொருள்.

 

கோதரிசனம்

இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை லட்சுமிதேவியாக வணங்குவர். பசுவை கிழக்கு முகமாக நிறுத்தி, சந்தனம், குங்குமம், பூ சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர். இதன் மூலம் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

அம்மி மிதித்தல்

பெண்ணின் வலது காலை, மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிக்க வேண்டும். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல், உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று உணர்த்துகிறது

அருந்ததிப் பார்த்தல்

அருந்ததி, வசிஷ்டரின் மனைவி. சிறந்த பதிவிரதையாக திகழ்ந்தவர் இவர். வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில், ஏழு நட்சத்திரங்களிற்கு இடையில் வசிஷ்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி நட்சத்திரமும் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. அருந்ததி நட்சத்திரத்தைப் மணமக்கள் பார்க்கும் படி செய்வதனால், ஒருவருக்கு ஒருவர் மிக உத்தமமாக வாழ்வார்கள் என்று கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...
Subscribe Newsletter