For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திர தின ஸ்பெசல்: வெஜிடபிள் புலாவ்

By Mayura Akilan
|

Vegetable Pulao
சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றி நம் தேசபக்தியை பறைசாற்றுவோம். வீடுகளில் டேபிள்களில் மூவர்ணக்கொடியை அலங்கரித்து வைத்திருப்போம். நாம் உண்ணும் உணவுகளிலும் மூன்று வர்ணங்கள் வருமாறு அமைந்தால் குட்டீஸ் ஆசையோடு சாப்பிடுவார்கள். மூவர்ண காய்கறிகளைக் கொண்டு வெஜிடபிள் புலாவ் ஈசியாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

காரட் - 2

பச்சை பட்டாணி - 100 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

காலிஃப்ளவர் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மல்லி, புதினா தழை - சிறிதளவு

பட்டை - 1 அங்குலம்

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - சிறிது

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளமாக, நறுக்கவும். காரட், பீன்ஸை அரை அங்குல சன்ன துண்டுகளாக நறுக்கவும். காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.

ஸ்டவ் பற்றவைத்து குக்கரை வைக்கவும். எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். காய்கள் சேர்த்து லேசாக கிளறவும். நன்றாக வதக்கினால் கலர் மாறிவிடும் எனவே வதக்கவேண்டாம்.

இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, 4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். மூடி போட்டு விசில் போடாமல் அடுப்பை வேகமாக எரிய விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது லேசாக திறந்து உப்பு போட்டு கலக்கவும். பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து ஓபன் செய்ய சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி. சாதம் உடையாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதில் பச்சை நிற மல்லி, புதினா இலைகளை அலங்கரிக்கவும். வெள்ளை சாதம் நடுவில் இருக்க இரு ஓரங்களிலும் ஆரஞ்சு வர்ணத்திற்கு காரட், பச்சை நிறத்திற்கு பீன்ஸ், பட்டாணி போட்டு சூப்பராக அலங்கரிக்கலாம்.

English summary

Independece day special : Vegetable Pulao Recipe | சுதந்திர தின ஸ்பெசல் : வெஜிடபிள் புலாவ்

Pulao is a nice Indian dish that is made with boiled rice and finely chopped vegetables. You can make vegetable pulao and celebrate the patriotic mood with a plate full of tri-colour pulao; white (rice), green (vegetables like beans) and orange (vegetables like carrots).
Story first published: Wednesday, August 15, 2012, 8:59 [IST]
Desktop Bottom Promotion