For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான... பன்னீர் குல்ச்சா

By Maha
|

காலை வேளையில் சாதாரண சப்பாத்திகளை செய்து போர் அடித்திருந்தால், அவர்களுக்காக சூப்பரான சுவையிலும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு வகையான சப்பாத்தி போன்று இருக்கும் குல்ச்சாக்களை செய்யலாம். அதிலும் இந்த பன்னீர் குல்ச்சா செய்வது மிகவும் எளிது. குறிப்பாக இத்தகைய குல்ச்சாக்களை ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிட்டிருப்போம்.

ஆனால் அந்த குல்ச்சாக்களை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இப்போது குல்ச்சாக்களில் மிகவும் பிரபலமான பன்னீர் குல்ச்சாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
தயிர் - 1/3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

உள்ளே வைப்பதற்கு...

பன்னீர் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 (தட்டியது)
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் தயிர், பால் சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். வேண்டுமெனில் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்பு அதனை 2 மணிநேரம் ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

2 மணிநேரம் ஆனப் பின்பு, மீண்டும் அதனை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறிய பௌலில் உள்ளே வைப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் உருட்டு வைத்துள்ள மைதா உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே பன்னீர் கலவையை சிறிது வைத்து மடித்து, மீண்டும் அதனை சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும்.

அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள குல்ச்சாக்களை போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி லேசான பொன்னிறத்தில் வந்ததும், எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மைதா உருண்டைகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சுவையான பன்னீர் குல்ச்சா ரெடி!!! இதனை மசாலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Delicious Paneer Kulcha

For breakfast, if you are planning to try a different type of chapathy recipe, then the filling and healthy paneer kulcha is the good option. It is easy to prepare and tastes delicious. Check out the recipe.
Desktop Bottom Promotion