For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெல்லம் பால் கொழுக்கட்டை

By Mayura Akilan
|

Sweet
வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை (mineral salts) உள்ளடக்கியது. இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் சங்க காலத்தில் இனிப்பு உணவு வகைகளைத் தயாரிக்க வெல்லத்தையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், "வெல்லம்" தொண்டை மற்றும் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது. வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 1 கப்

எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

காய்ச்சிய பால் - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்

சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

வெல்லப்பாகு செய்முறை

வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்முறை

இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

English summary

Jaggery milk kozhukattai recipe. | வெல்லம் பால் கொழுக்கட்டை

paal kozhukattai with jaggery and coconut milk in this recipe.
Story first published: Wednesday, July 4, 2012, 18:17 [IST]
Desktop Bottom Promotion