For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பட்டாணி கச்சோரி

By Maha
|

மாலையில் குளிரும் நேரத்தில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அப்படி சாப்பிட நினைக்கும் வேளையில், வீட்டில் மைதா மற்றும் பச்சை பட்டாணி இருந்தால், அவற்றைக் கொண்டு கச்சோரி செய்து சாப்பிடலாம். மேலும் இது பச்சை பட்டாணி சீசன் என்பதால், பட்டாணி விலை மலிவில் கிடைக்கும்.

எனவே மாலையில் பச்சை பட்டாணியைக் கொண்டு கச்சோரி செய்ய முயற்சி செய்து பாருங்கள். சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Matar Ki Kachori Recipe

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

உள்ளே வைப்பதற்கு...

பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் நெய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரமான துணியில் கட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுத்து, அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சோம்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து பச்சை பட்டாணியை மசித்து, அத்துடன் சேர்த்து கிளறி, பின் அதில் அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு பொடி, கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.

பிறகு அதில் கொத்தமல்லியை தூவி கிளறி, பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் சிறு வட்டங்களாக தேய்த்து, அதன் நடுவே பச்சை பட்டாணி உருண்டையை வைத்து, கலவை வெளியே வராதவாறு, வட்டமாக மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் செய்து வைத்துள்ள கச்சோரிகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பச்சைப் பட்டாணி கச்சோரி ரெடி!!!

Image Courtesy: Twitter

English summary

Matar Ki Kachori Recipe

Today, we would like to share with you one of the most delectable snacks recipes of all time is Matar Ki Kachori. Here is how you prepare the yummy matar ki kachori to fulfill your hungry tummy.
Story first published: Thursday, December 5, 2013, 15:33 [IST]
Desktop Bottom Promotion