For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் கேஃப்ரியல்

By Maha
|

சிக்கன் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் மிகவும் சூப்பராக இருக்கும். அதில் இப்போது சிக்கன் கேஃப்ரியல் என்னும் சிக்கன் ரெசிபியைப் பார்க்க போகிறோம். இது ஒரு கோவா ரெசிபி. பொறுமை உள்ளவர்கள், இந்த சிக்கன் கேஃப்ரியல் ரெசிபியை ட்ரை செய்து பார்க்கலாம். ஏனெனில் இந்த ரெசிபி செய்வதற்கு 3-4 மணிநேரம் ஆகும். பொறுமை வேண்டுமென்று சொல்வதற்கு காரணம், சிலருக்கு சிக்கனை சமைக்கும் போதே பசி உயிரை எடுக்கும்.

ஆனால் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சுவை கிடைக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறைக்கு போகலாமா!!!

Chicken Cafreal

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 6
பச்சை ஏலக்காய் - 8
மிளகு - 8
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4-6 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது)
வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து விட்டு, கூர்மையான கத்தியால் நன்கு ஆழமாக கீறி விட வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக மொறுமொறுவென வறுத்து, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மல்லி, சீரகம், பச்சை சீரகம், மிளகு மற்றும் பட்டை போட்டு வறுத்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வறுத்து குளிர வைத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை சிக்கன் துண்டுகளை மீது நன்கு தடவி, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு, தீயை குறைவில் வைத்து, கிரேவி வேண்டுமெனில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது வெந்ததும், அதில் வினிகரை ஊற்றி, 2-3 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் கேஃப்ரியல் ரெடி!!! இதன்மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை தூவி, சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

குறிப்பு:

இந்த சிக்கன் கேஃப்ரியலை கிரேவியாகவோ அல்லது வறுவல் போன்றோ செய்யலாம். அனைத்தும் விருப்பதைப் பொறுத்ததே.

Image Courtesy: bubblews

English summary

Chicken Cafreal

Cafreal is a spicy chicken preparation consumed widely in the Indian state of Goa. Here is the preparation of that Chicken Cafreal recipe. Check out...
Desktop Bottom Promotion