For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் அவசியம் செய்ய வேண்டிய 4 மூச்சுப் பயிற்சிகள்!!

By Karthikeyan Manickam
|

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளுக்கு மட்டுமில்லாமல் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். சரியான அளவில் சீராக ஆக்ஸிஜன் கிடைத்தால் தான் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

அத்தகைய 4 எளிதான மூச்சுப் பயிற்சிகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

4 Breathing Exercises Every Pregnant Woman Should Do

வயிற்றிலிருந்து...

'பெல்லி ப்ரீத்திங்' என்று அழைக்கப்படும் இந்த மூச்சுப் பயிற்சியைக் கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்ய வேண்டும். கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, தாடை, தோள்கள் மற்றும் இடுப்பை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் கையை வயிற்றில் வைத்துக் கொண்டு, மறு கையையும் அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து, அடி வயிற்றிலிருந்து மூச்சை இழுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1, 2, 3... என்று 8 வரை எண்ணுங்கள். பின் மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதே முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.

மார்பிலிருந்து...

பாதங்களை இணையாக வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக் கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை மார்பில் வைத்துக் கொள்ளுங்கள் (அழுத்தக் கூடாது). நுரையீரல் விரிவடைவதை உங்களால் உணர முடியும். அப்புறம், ஓரிரு நொடிகள் மூச்சை அப்படியே பிடித்துக் கொண்டிருந்து விட்டு, மெதுவாக மூச்சை வெளியே விட்டு, 10 வரை எண்ணவும். இதேபோல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்குப் பின் இந்தப் பயிற்சியைச் செய்வது சிரமமாக இருந்தாலும், முடிந்த வரை செய்து வாருங்கள்.

மூச்சை விழுங்கி...

மல்லாக்க கீழே படுத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் நுரையீரல்களுக்கு நல்லது. தினமும் ஒரு 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் உள்ள குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராகப் போகும்.

மாற்று மூச்சு விழுங்கும் பயிற்சி

இதை நின்று கொண்டே செய்யலாம்; அல்லது வசதியாக உட்கார்ந்து கொண்டும் செய்யலாம். உடம்பு முழுவதையும் நன்றாக ரிலாக்ஸ் செய்து கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஓரிரு நொடிகள் கழித்து, அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயைத் திறந்து, காற்றை இழுத்து விழுங்கி, 5 வரை எண்ணவும். பின் வாயை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

English summary

4 Breathing Exercises Every Pregnant Woman Should Do

Corrective breathing during pregnancy is very crucial. The reason being your body needs an adequate supply of oxygen to meet the requirements of your growing baby and for the optimum functioning of your body.
Desktop Bottom Promotion