For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!

By Mayura Akilan
|

Pregnant Women
கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் அதுதான் கருவில் உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேசமயம் கர்ப்பகாலத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் அவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் அனுபவசாலிக்கள்.

விரதம் வேண்டாமே

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பட்டினியாக இருக்கக் கூடாது. சுகப்பிரசவம் ஆகவேண்டுமே? குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டுமே என்பதற்காக சிலர் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு விரதம் இருப்பார்கள். இது போன்ற விரதம் எல்லாம் கர்ப்பகாலத்தில் கூடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அது கர்ப்பிணிகளுக்கும் கரு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம்.

அழுகியதை சாப்பிடவேண்டாம்

அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம். அதேபோல் வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. அதேபோல் அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

அதிக சூடு, அதிக குளிர்ச்சி

மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம். அதேபோல் உடலுக்கு அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.‌ எனவே பழங்களை கடித்து சாப்பிடுங்க.

அதிக எடையை தூக்காதீங்க

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குனிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம். நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது ஒரு பக்கம் ஒருக்களித்து படுக்கவேண்டும் என்கிறார்கள்.

கண்ட மாத்திரை சாப்பிடக்கூடாது

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

அதேபோல் சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அவசரத்திற்கு சாதாரண மருத்துவரிடம் செல்ல வேண்டி இருக்கும் பட்சத்தில் கர்ப்பமாக இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

மேக் அப் போடாதீங்க

கர்ப்ப காலத்தில் அதிக மேக் அப் வேண்டாம் இயல்பாக இருங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ரசாயனங்கள் கருக் குழந்தையை பாதிக்கும் என்கின்றனர். அதேபோல் முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம். அதேபோல் மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மனஅழுத்தம் வேண்டாமே

அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

கர்ப்பகாலத்தில் இந்த ஆலோசனைகளை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். பின்பற்றிப் பாருங்களேன்.

English summary

Top Ten Don'ts for Pregnant Women | கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!

Pregnancy is an exciting time, filled with anticipation and wonder. But keeping track of all the changes that are occurring to mind, body, and spirit not to mention routine can be hard, especially with a woman's first pregnancy. What you do and don't do during pregnancy can help you and your baby stay healthy
 
Story first published: Saturday, September 22, 2012, 13:12 [IST]
Desktop Bottom Promotion