For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!

By Mayura Akilan
|

Sore Throat Children
குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதை உடனே கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டை பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து விடும் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்.

பாக்டீரியா நோய் தொற்று

தொண்டை வீக்க நோய் என்பது பாக்டீரியா தொற்றினால் உண்டாகிறது. இதனுடைய முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகும்.

தொண்டை வீக்க நோய் 4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு மிகவும் சாதாரணமாகவும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அபூர்வமாகவும் ஏற்படும். ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மூலம் உண்டாகும் ஒரு வகை தொண்டை வீக்க நோய் உடலின் மற்ற பாகங்களிலும் சிக்கலை உண்டாக்கும். கிருமியின் தாக்கம் குறைவாக இருந்தால் நோய் குணமாகிவிடும். இல்லையெனில் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும். உரிய சிகிச்சைக்கு பின்னரே நோய் குணமாகும். சுய மருத்துவம் செய்யக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொண்டை நோயை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் வேறு சில சிக்கல்களும் உண்டாகலாம். அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக்காய்ச்சலாகும். இதனால் தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளையும் பாதிக்கப்படலாம். மூட்டு வீக்கம் மற்றும் சிறுநீரக வீக்கம் ஆகியவையும் ஏற்படும். மற்ற வகை தொண்டை வீக்க நோய்கள் இந்த சிக்கல்களை உண்டாக்காது.

புற்றுநோய் அபாயம்

அதே போல் தொண்டைப்புண் ஏற்பட்டு நீண்ட காலம் கவனிக்காமல் இருந்தால் அது புற்று நோயாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு தொண்டை வலியினால் ஏற்படும் காய்ச்சலை கண்காணிக்க வேண்டும். ஆண்டிபயாடிக்ஸ் மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கொடுக்க ஆரம்பித்த 3 நாட்களுக்குள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபயாடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.

கொதிக்கவைத்த நீர்

வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரிய வருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கடைகளில் வாங்கப்படும் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.

குடிக்கும் டம்ளர் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் டம்ளர்களை சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும். சாலையோரங்களில் சுகாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர் பானங்கள், தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதமான உணவுகள்

தொண்டை வீக்க நோயுள்ளவர்களுக்கு உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையை கொடுக்கலாம். தொண்டை எரிச்சல், காய்ச்சல் காரணமாக குழந்தைகள் உணவு உண்ணவோ அல்லது பானங்களை குடிக்கவோ மறுக்கலாம். ஏனென்றால் குழந்தைக்கு உணவுகளை விழுங்குவதில் கஷ்டம் இருக்கும். குழந்தைகள் உணவு விழுங்குவதற்கு கஷ்டப்பட்டால் விழுங்குவதற்கு எளிதான சூப், ஐஸ்கிரீம் போன்ற மென்மையான உணவுகளை கொடுக்கலாம். அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உள்நாக்கு பெரியதாகி சிவந்திருக்கும். சில குழந்தைகளுக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, அடி வயிற்றில் வலி மற்றும் தசை வலி போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம். அதுமாதிரியான நேரங்களில் மென்மையான உணவுகள் மற்றும் நீராகார உணவுகளைக் கொடுக்கலாம்.

1 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும் சுத்தமான தேன் 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 மில்லி) கொடுக்கலாம். வளர்ந்த குழந்தைகளை சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். இதனால் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் வலிநீங்கி படிப்படியாக குணமாகும்.

ஐஸ் கட்டிகள் மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொஞ்சம் நிவாரணமளிக்கலாம். ஆனால் சிறு குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக்கூடும் ஆபத்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

Indian home remedies for strep throat | குட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!

A streptococcus bacterium is the common cause of strep throat. This type of infection in the throat is often mistaken for sore throat and tonsillitis. Strep throat commonly affects small children and adolescents.
Story first published: Monday, July 16, 2012, 16:44 [IST]
Desktop Bottom Promotion