For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் வளர புரதச் சத்துணவு கொடுங்க!

By Mayura Akilan
|

Child
குழந்தைகளின் வளர்ச்சிக்கு போதிய அளவு புரதச் சத்து தேவை. புரதச் சத்தானது ஜீரணநீர்கள், நொதிகள், ஹார்மோன் சுரப்பிகளின் நீர்கள், வைட்டமின்கள், ஹீமோகுளோபின் போன்றவற்றை தயார் செய்வதற்கும் இன்றியமையாததாகும். புரதமானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நகம், முடி, போன்றவைகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்

குழந்தைகளுக்குத் தேவையானவை

புரதச் சத்து குறைவினால் குழந்தைகளுக்கு சவலைநோய் ஏற்படும். சுறுசுறுப்பின்மை, வயிறு வீக்கம் மற்றும் உடல் வீக்கம் ஏற்படும். புரதச் சத்து குறைவினால் குழந்தையின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் குன்றிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இரண்டு மாதத்தில் இருந்து ஆறு மாத குழந்தைகளுக்கு 2.5 லிருந்து 3.5 கிராம் புரதம் குழந்தையின் ஒரு கிலோ எடைக்கு ஒரு நாளைக்கு தேவையாகும். 100 மில்லி தாய்பாலில் 1.25 கிராம் புரதம் உள்ளது. நீண்ட நாட்கள் தாய்பால் மட்டுமே கொடுக்கும் குழந்தைகளுக்கு சவலைநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவலை நோயின் அறிகுறிகள்

சவலைநோயின் அறிகுறிகள் மெதுவாகத்தான் தோன்றும். பள்ளி பருவத்தில் குழந்தைகள் எதிலும் ஆர்வமின்றி காணப்படும். தோல் வறண்டு உதிர ஆரம்பிக்கும். வாய் ஓரத்தில் புண்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சவலைநோயினால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புரதச் சத்து உணவுகள்

புரதச்சத்து அசைவ உணவுகளில் இருந்தும், சைவ உணவுகளில் இருந்தும் கிடைக்கிறது. அசைவ புரதம் நல்ல தரமான புரதமாகும். அதேபோல சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம் சமன்பட்ட புரதம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முழுமையான புரதச்சத்து உணவுகள்

பால், முட்டை, இறைச்சி, மீன், பால் பொருட்களில் அனைத்தும் முழுமையான புரதச்சத்து அதிகமாக இருக்கும். முழுமையான புரத உணவு கிடைக்காத போது முழுமையடையாத புரத உணவுகளையாவது கொடுக்க வேண்டும்.

சவலை நோயுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடை எடைக்கு நான்கில் இருந்து ஐந்து கிராம் புரதச் சத்தினை அளிக்கவேண்டும். பசும்பாலை தண்ணீர் கலக்காமல் காய்ச்சி கொடுக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதிலாக வறுத்த பொட்டுக்கடலை, வெண்ணெய் போன்றவைகளை கொடுக்கலாம்.

விலை அதிகமான இறைச்சி, மீன், முட்டை போன்றவைகளை கொடுக்க இயலாதவர்கள் வேர்க்கடலை, பொட்டுக்கடலை தானியவகைகள், பருப்பு வகைகளை கொடுக்கலாம். அதேசமயம் சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகள், குறைபிரசவ குழந்தைகள் அதிக அளவு புரதம் சாப்பிட்டால் புரதக் காய்ச்சல் ஏற்படும். அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

புரதச்சத்து குழந்தையின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், குழந்தைகளுக்கு போதிய அளவு புரதச் சத்தினை அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

The Importance of Protein | குழந்தைகள் வளர புரதச் சத்துணவு கொடுங்க!

Adequate protein is essential for maintaining the body’s protein stores and keeping many bodily functions running smoothly. Due to the demands of growth and development, getting adequate protein is particularly important during infancy, childhood, and adolescence.
Story first published: Saturday, March 10, 2012, 17:12 [IST]
Desktop Bottom Promotion