For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூக வலைத்தளங்கள் நமக்கு கற்றுத் தரும் சில பாடங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் நுழையாத இடங்கள் என எதுவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் என்பவை இணையம் வழியாக புதிய மனிதர்களை சந்திக்கவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் உதவும் அடிப்படையான விஷயங்களாகவே உள்ளன. பல்வேறு இணைய தளங்களும் சமூக வலைத்தளங்களை முன்னேற்றுவதற்காகவும், உலகளவில் மனிதர்களை இணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர், லிங்க்ட்இன் போன்றவை அவற்றில் சில வலைத்தளங்களாகும். உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் எண்ணங்களை பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ள இந்த தளங்கள் உதவுகின்றன.

இந்த சமூக வலைத்தளங்கள் பல்வேறு வகையிலும் பெருகி வருகின்றன. உலகளவில் மக்களை ஒன்றிணைக்க இந்த தளங்கள் உதவி புரிந்துள்ளன. மேலும் வணிகத் தொடர்புகள் செய்யவும், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை - இனத்தவரை ஒன்றிணைக்கவும், தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையிலான இடைவெளிகளை இணைக்கவும் உதவி வருகின்றன. எனினும், நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல, நல்ல விளைவுகளுடன் சில மோசமான விளைவுகளும் இந்த வலைத்தளங்களால் ஏற்படுகின்றன.

Things Social Networking Sites Teach Us

சமூக வலைத்தளங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுத் தந்துள்ளன. அவை நமக்கு பல்வேறு நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களை கொடுக்கின்றன. எனவே, சமூக வலைத்தளங்கள் நமக்கு கற்றுத் தரும் சில பாடங்கள் பற்றி இங்கே உங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

1. உண்மையாக இருக்கவும் - சமூக வலைத்தளங்கள் உண்மையான தளங்களாகவே நம்மை வந்தடைகின்றன. இங்கே மோசடிகள் எப்பொழுதுமே செயல்படுத்தப்படுவதில்லை மற்றும் மோசடியான விஷயங்களுக்கும் இடமில்லை. இந்த வலைத்தளங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் மற்றும் அதீத ஈடுபாடு இல்லாமலும் கவனித்து வந்தால் ஆர்வமூட்டுவதாக இருக்கும். எனவே எப்பொழுதும் இந்த வலைத்தளங்களில் சந்திக்கும் புதிய நபர்களிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

2. எங்கெங்கிலும் புதிய நண்பர்கள் - உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் சந்திக்கவும், பேசவும் உதவும் தளமாகவே சமூக வலைத்தளங்கள் உள்ளன. புதிய உறவுகளுக்கு தூரங்கள் இங்கே பிரச்னையாக இருப்பதில்லை. 'எந்தவொரு உறவிலும், இடைவெளி ஒரு பிரச்னையே அல்ல' என்பது தான் சமூக வலைத்தளங்கள் நமக்கு சொல்லும் மிகவும் முக்கியமான பாடமாகும்.

3. புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் - சமூக வலைத்தளங்களை மிகவும் பயனுள்ள வகையிலும், அதன் ஒவ்வொரு அம்சங்களையும் திறனுடனும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் 'தனியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும்' என்ற பாடத்ததை சமூக வலைத்தளங்கள் அளிக்கின்றன. இந்த வலைத்தளங்களில் உள்ள அம்சங்களைப் பயன்படுத்தி வணிக வாய்ப்புகளையும் கூட அதிகரித்துக் கொண்டு விட முடியும். சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பொருளையும் கடை விரித்து செலவில்லாமல் விற்று விட முடியும்.

4. விழித்திரு - எந்த நாட்டில் வாழும் மக்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லை பேதமின்றி நேர்மறையான ஒற்றுமையை சமூக வலைத்தளங்கள் மேம்படுத்தி வருகின்றன. இதன் மறுபக்கத்தில், இந்த வலைத்தளங்கள் வழியாக நாம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்கவும் வேண்டியது அவசியம் என்றும் உணர்த்துகின்றன. நீங்கள் இணையம் வழியாக சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நல்ல மற்றும் நட்பை விரும்பும் நபராக இருக்கமாட்டார். சில ஏமாற்றுக்காரர்களும் இருப்பார்கள், எனவே தேவை கவனம். இங்கு சமூக வலைத்தளங்கள் நமக்கு சொல்லும் பாடம் 'புதிய நபர்களிடம் அதிக அளவில் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்' என்பது தான். நம்பிக்கை நல்லது தான், ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை நம்மை மண்மூடிப் போக வைத்து விடும்.

5. அளவோடு தேவை விளையாட்டு - முகநூல் அல்லது எந்தவொரு சமூக வலைத்தளமாக இருந்தாலும் சரி, அதில் உற்சாகம் மிகுந்திருக்கும். காலத்தை கழித்திருக்க சிறந்த கருவிகளாகவே இவை உள்ளன. சமூக வலைத்தளங்கள் நம்மை உற்சாகமூட்டவும், பிரபலப்படுத்தவும் மற்றும் பலரும் விரும்பச் செய்யவும் உதவும். ஆனால், யாருடைய தனிமையையும் தொந்தரவு செய்யும் உரிமையை அவை நமக்குத் தருவதில்லை. எனவே படங்கள் அல்லது வீடியோக்களை வைத்து உங்கள் விளையாட்டின் அளவை தாண்டிச் செல்லவோ அல்லது யாரையும் அவமானப்படுத்தவோ வேண்டாம். உண்மையில் இவ்வாறு செய்வது சட்டத்திற்குப் புறம்பான செயலாகவும் மற்றும் பிரச்னைகளை உருவாக்குவதாகவும் இருக்கும்.

இவையெல்லாம் சமூக வலைத்தளங்கள் நமக்கு கொடுக்கும் முக்கியமான பாடங்களாகும். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் ஊட்டமான கருவியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவது மிகவும் சிறந்த வரமாகவோ அல்லது மிகவும் மோசமான சாபமாகவோ கூட கருதப்படுகிறது.

English summary

Things Social Networking Sites Teach Us

Social networking teaches us quite a few things. We experience a lot of things, both good and bad. So there are things that social networking sites teach us are described below.
Desktop Bottom Promotion