For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் கொலு வெச்சுருக்கீங்களா? இதோ சில சூப்பர் டிப்ஸ்....

By Maha
|

Navarathri Golu Tips
நவராத்திரி என்றாலே ஒன்பது நாட்கள் நடைபெறும் ஒரு பண்டிகை என்பது அதன் பெயரிலேயே தெரிகிறது. மேலும் நவராத்திரியில் கொலு வைப்பது தான் முக்கியமானது. ஆகவே இந்த நாட்களில் அனைத்து வீடுகளிலும் கொலு பொம்மைகளை வாங்கி வைத்து, வீட்டில் அலங்கரித்து, விதவிதமான ரெசிபிக்களை செய்து, கடவுளுக்கு படைத்து வருவார்கள். அதிலும் இந்த நவராத்திரி பெண்கள் போற்றுதலுக்குரிய நாள் என்று சொல்லலாம். சொல்லப்போனால் நவராத்திரியை பெண்கள் போற்றும் நவராத்திரி என்று சொல்வார்கள்.

ஏனெனில் பெண்கள் இந்த நாட்களில் வீட்டில் கொலுவை அமைத்து பூஜை செய்து வருவார்கள். அதிலும் இந்த நாட்களில் பெண் தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை போற்றும் வகையில் வீட்டில் படிக்கட்டுகளை அமைத்து, பொம்மைகளை வாங்கி அடுக்கி, வீட்டிலேயே தெய்வத்தை குடியிருக்கும் வகையில் அலங்காரங்களை செய்வார்கள். இப்போது அவ்வாறு செய்யும் கொலு அலங்காரத்திற்கு ஒரு சில டிப்ஸ்...

* கொலுவில் வைக்கும் பொம்மைகளில் தூசிகள் ஏதேனும் இருந்தால், அப்போது அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி, விபூதியால் துடைத்தால், பளிச்சென்று இருக்கும்.

* கொலுவை வைக்கும் போது கண்டிப்பாக, அங்கு மலையையும் செட் செய்வார்கள். அவ்வாறு மலையை செட் பண்ணும் போது, ஒரு தகர டப்பாவை கவிழ்த்து வைத்து, அதனுள் சாம்பிராணியை எரிய வைத்தால், அந்த மலை தேவலோகத்தில் வரும் புகைப்போல் காட்சியளிக்கும். மேலும் அந்த இடமே வாசனையுடன் இருக்கும்.

* சிலர் தெப்பக்குளம் போல் அமைப்பார்கள். அவ்வாறு அமைக்க ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிய வாத்து பொம்மைகள், கலர்கலரான தெர்மாகோல் உருண்டைகள், ஜிகினா போன்றவற்றை நீரின் மேல் தூவினால், குளம் நன்கு ஜொலிக்கும்.

* கொலு என்றாலே அதில் எதை வேண்டுமானாலும் வைக்கலாம். சிலர் பூங்காவை வைப்பார்கள். அவ்வாறு பூங்காவை அமைக்கும் போது, அங்கு செடிகள் வளர்ந்திருப்பது போல் இருக்க, கடுகு மற்றும் கேழ்வரகை நீரில் இரண்டு மணிநேரம் ஊற வைத்து, பின் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் மண்ணை போட்டு, அதன் மேல் இந்த கடுகு மற்றும கேழ்வரகைத் தூவினால் விரைவில் முளைத்துவிடுவதோடு, செடி போன்றும் அழகாக காணப்படும்.

* படிகள் அமைக்கும் போது இதன் இரு ஓரங்களும் அழகாக இருக்க, வீட்டில் இருக்கும் காலியான ஸ்ப்ரே பாட்டில் அல்லது சென்ட் பாட்டிலின் மீது, கலர் பேப்பரை சுற்றியோ அல்லது அந்த டப்பாவின் மேல் பசையைத் தடவி, பாசி அல்லது முத்துக்களையோ அதன் மேல் ஒட்ட வைத்து, பின் அதனுள் பூங்கொத்துக்களை வைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.

* ஏதேனும் புல்வெளி அல்லது புல் தரைகள் அமைக்க வேண்டுமென்றால், வீட்டில் தேங்காய் பால் எடுத்த தேங்காய் சக்கையை, பச்சை கலர் பவுடரில் கலந்து, பரப்பினால், புல்வெளிகள் போன்று காட்சியளிக்கும்.

ஆகவே வீட்டில் கொலு வைப்பவர்கள், மேற்கூறிய சில டிப்ஸ்களை படித்து, உங்கள் வீட்டுக் கொலுவையும் அழகாக அலங்கரித்து மகிழுங்கள்.

English summary

Navarathri Golu Tips

The most popular Golu or the doll festival is a major attraction during the navratri pooja in TamilNadu. The doll collection that keeps adding up every year is arranged in a room. So here are a few tips and ideas on golu and golu padis which may be of use to you.
Desktop Bottom Promotion