For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!

By Mayura Akilan
|

Pressure Cookers
இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுகாதாரம் அவசியம்

சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம்.

குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

கறுப்பு வெள்ளையாகும்

குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும்.

குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.

கேஸ்கட் பராமரிப்பு

சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது.

சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

நீண்ட ஆயுள் கிடைக்கும்

தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸ் மிச்சப்படும்.

நமக்கு பாதுகாப்பு

வருடத்திற்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து இன்ஸ்பெக்சன் செய்யவேண்டும். கேஸ்கட், விசில், போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பார்க்கவேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்சினை என்றாலும் குக்கர் வெடித்து விடும் ஜாக்கிரதை. குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.

English summary

How to Care for Pressure Cookers | குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!

When you want to cook tasty and healthy food fast, pressure cookers top the list. Not only can you cook meats, fish, chicken and casseroles in minutes, but you can use the freshest ingredients and prepare meals from scratch with minimal effort. If you're in the market for a pressure cooker, you'll have to learn how to use it and take care of it properly.
Story first published: Wednesday, April 18, 2012, 17:52 [IST]
Desktop Bottom Promotion