For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி?

By Maha
|

How To Care For Rose Plants?
பூச்செடிகள் வளர்ப்பது மற்றும் அலங்கார மலர் தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களின் முக்கியமான கவலை - பல வண்ணங்களில் பூக்கும் வித விதமான ரோஜா செடிகளை எப்படி வளர்த்து பராமரிப்பது என்பதுதான்.

மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. எல்லா தோட்டக்கலை ஆர்வலர்களுமே ரோஜா செடியை வளர்ப்பு என்பது சிரமமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒல்லியான பலவீனமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த செடிக்கு தேவைப்படும் உபசரிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இருப்பினும் சிரமம் பார்க்காமல் விசேஷமாக கவனித்து கொள்ளும் பட்சத்தில் நமது தோட்டத்திலோ வாசலிலோ பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகிவிடலாம். அதிலும் "தோட்டத்தை நல்லா வச்சிருக்கீங்க" என்று யாராவது உங்களை பாராட்டினால் அது உண்மையில் ரோஜா மலர்களை பார்த்து சொல்லப்படுவதாகத்தான் இருக்கும்.

எல்லாம் சரிதான், பார்த்தவுடனேயே நம் மனதை கொள்ளும் இந்த அற்புத ரோஜா செடிகளை செழிப்பாக மலர்ந்து சிரிக்கும்படி வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லையே. தொட்டியில் வளர்த்தாலும் சரி, தோட்டத்தில் வளர்த்தாலும் சரி, ரோஜாச்செடிகள் பளிச்சென்று பூத்து ஜொலிக்கும்படி வளர்த்தெடுப்பது உண்மையிலேயே ஒரு பெரிய சவால் இல்லையா? நர்சரியிலிருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்து அவசர அவரசரமாக தொட்டியில் வைத்து தினமும் நீருற்றி - பதினைந்து நாள் கழித்து வறண்டுபோன இலைகளுடன் அது பரிதாபமாக காட்சியளிப்பதை பார்த்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு கோபம் வரும்; சிலருக்கு அழுகை வரும். அது போகட்டும், அந்த மாதிரியான ஏமாற்றங்களை தவிர்க்கவும், ரோஜாச்செடிகளை திட்டமிட்டு செழிப்புடன் வளர்த்து பூப்பூக்க வைப்பதற்கும் இதோ சில எளிய குறிப்புகள்:

• செடியின் உயரத்திற்கு ஒன்றரை பங்கு ஆழமும், அதன் அகலத்தை விட இரண்டு பங்கு அகலமும் கொண்ட குழியை வெட்டிக்கொள்ளுங்கள். அடியில் ரோஜா உரத்தை இட்டு அதன் மேல் இயற்கை எரு மற்றும் செம்மண் கலவையை ஒரு அடுக்குக்கு நிரப்புங்கள். சிறிதளவு உரத்தை மண்ணின் மேற்பகுதியிலும் தெளிக்க வேண்டும்.

• இப்போது ரோஜாச்செடியை அதன் பை அல்லது தொட்டியிலிருந்து மென்மையாக எடுத்து குழியில் வையுங்கள். செடியின் மண் விளிம்பு புதிதான குழியின் விளிம்பை ஒட்டியிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். செடியில் வேர்களை ஜாக்கிரதையாக சுத்தம் செய்து விடுங்கள். இதனால் வேர் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

• அடுத்து குழியை மண், இயற்கை எரு, சிறிது உரத்தெளிப்பு என்று மாற்றி மாற்றி நிரப்பி மூடுங்கள். நன்கு நீர் ஊற்றி திரும்பவும் ஒரு அடுக்கு மண்-எரு-உரத்தெளிப்பு என்று நிரப்புங்கள். நீர் நன்கு உறிஞ்சப்பட்டபிறகு திரும்பவும் மண் இயற்கை எருக்கலவையால் நிரப்புங்கள். கடைசியாக ஈரம் காயாமல் இருக்க சிறிது செத்தைகளை லேசாக புதிய மண்பரப்பின் மீது பரப்பி விடுங்கள்.

• பூச்சிகள் மற்றும் இலைப்புழுக்கள் ரோஜா செடியை தாக்காமல் இருக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய பூச்சிக்கொல்லி கலவையாக அரை ஸ்பூன் ‘விம்' வாஷிங் திரவத்தை (அல்லது வேறு பிராண்ட் சோப்புத்தண்ணீர்)கால் லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜாச்செடியில் நன்கு தெளியுங்கள். இது இலைப்புழுக்கள் மற்றும் கம்பளிப் பூச்சிகள் போன்றவற்றை அழித்து விடும்.

• பழுத்த இலைகள் தானே விழும் என்று காத்திருக்க வேண்டாம். அழுகும் நிலையில் இலைகள் தெரிந்தால் உடனே அவற்றை அகற்றிவிடுங்கள். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இலைகள் காட்சியளித்தல் அது இரும்புச்சத்து அல்லது நைட்ரஜன் சத்துக்குறைபாடு என்று அர்த்தம்.

• செடியை சீக்கிரம் வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். தொட்டியில் அல்லது செடிக்குழியின் மேல்பாகத்தில் 3 அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும். கொஞ்சம் செடியின் மீதும் நீரை தெளிக்கலாம். தினமும் ரோஜாச்செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

குறிப்பு:

• ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் 6 மணி நேரமாவது செடியில் வெயில் விழுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதே சமயம் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தை பார்த்து வைப்பதும் முக்கியம்.

• ரோஜா செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் தவறக்கூடாது. செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எவ்வளவு பெரிதாக வருமோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டு நட வேண்டும். (தொட்டிகளில் என்றால் பயமில்லை அவ்வப்போது நகர்த்திக்கொள்ளலாம்)

• ரோஜா செடிகளை மண்ணில் நடுவதற்கு முன்பு மண் அமிலப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மண் அமிலத்தன்மை எனப்படும் pH விகிதாச்சாரம் 5.5 முதல் 6.6 வரை இருப்பது ரோஜாச்செடிகள் செழிப்புடன் வளர மிகவும் அவசியம்.

• கோடைக்காலத்தின் போது ரோஜாச்செடிகளுக்கு காலையிலேயே நீர் ஊற்றுவது சிறந்தது. அப்போதுதான் இரவு வருவதற்குள் மண் உலர்ந்த நிலைக்கு வர வசதியாக இருக்கும். குளிர்காலம் அல்லது வெப்பநிலை குறைவாக இருக்கும் காலங்களில் 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினாலே போதுமானது.

English summary

How To Care For Rose Plants? | ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி?

To provide care for your roses and ensure you get the most out of your roses, there are a few simple steps you can take to have a beautiful and easy-to-enjoy garden.
Story first published: Saturday, January 19, 2013, 12:59 [IST]
Desktop Bottom Promotion