For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 வயதுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வதற்கான டிப்ஸ்...

By Super
|

உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அதிலும் வயது அதிகம் ஆக, இந்தப் பழக்கம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இளமை வயதைக் காட்டிலும், முதுமை வயதில் உடலுக்கு அதிகமான பராமரிப்பு தேவைப்படும். இந்த பராமரிப்பு, உடல் நலம் மட்டுமல்லாது, மன நலத்தையும், உணர்வுப்பூர்வமான நலத்தையும் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வயது கூடும்போது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். எனவே 50 வயதுக்கு மேற்பட்டோர் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று திகைக்காதீர். ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவையும், செய்யும் உடற்பயிற்சியையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அமைகின்றது. கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடினமாக இருந்தாலும், முதுமை பருவத்தில் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதமாக இருப்பதனால், எப்பாடுபட்டேனும் பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

அன்றாடம் உண்ணும் காய்கறிகளோடு, பழங்கள், புரத உணவுகள், முழு தானியங்கள் மற்றும் அதிக அளவிலான தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக, "ஆரோக்கியமான தேர்வை எளிதான தேர்வாக ஆக்கிக் கொள்ளுங்கள்". உதாரணமாக, ஒரு நாளின் தொடக்கத்தில் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பிக் கொண்டு, அதனை கண் எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், "உணவு அட்டவணையில் இல்லாத உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை சாப்பிட நேர்ந்தால், சரியான அளவில் உண்ணுதல் நலம்".

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

வாழ்வின் பரபரப்புகளுக்கிடையே எளிதாக மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியே ஆகும். செல்ல நாயை நடைபழகக் கூட்டிச் செல்வதோ அல்லது பேரக் குழந்தைகளோடு பேசிக் கொண்டே நடந்து செல்வதோ, எதுவாயினும், குறிக்கோள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதாக இருக்கட்டும். இப்பயிற்சி உடலை உறுதி அடைவதற்கான பயிற்சியளித்து, இதயத்தை சீரான முறையில் இயங்க வைக்கும்.

தூக்கம்

தூக்கம்

நல்ல தூக்கம், ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஓய்வளித்து களைப்பை அகற்றி, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. கனவு கலையாமல் உறங்க வேண்டுமெனில் போன்கள், டேப்லெட்கள், லேப்டாப் போன்ற சாதனங்களை வேறு ஒரு அறையில் வைத்து விட வேண்டும். இதன் மூலம், படுக்கச் செல்லும் முன்பு கடைசியாகவோ அல்லது காலை எழுந்தவுடன் முதன் முதலாகவோ இச்சாதனங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தவிர்க்கலாம். மேலும், இவற்றிலிருந்து பளிச்சிடும் ஒளியோ அல்லது அதிர்வலைகளோ தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

வழக்கமான பரிசோதனை

வழக்கமான பரிசோதனை

வழக்கமான பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம். குறிப்பாக கொழுப்புச் சத்து, இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் எலும்புருக்கி நோய் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது அதிமுக்கியமாகும். மேலும் ஃப்ளூ காய்ச்சல், நிமோனியா(pneumonia), பெர்டுஸ்ஸிஸ் (pertussis), டிப்தீரியா(diphtheria) மற்றும் டெட்டனஸ்(tetanus) ஆகிய நோய்கள் தாக்காமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை பற்றி மருத்துவருடன் கலந்து ஆலோசிக்கவும்.

மதுபானம்

மதுபானம்

உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே குறைவாக அருந்துவது சிறந்த யோசனையாகும். மேலும், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் எந்த வகை அல்லது எத்தனை முறை எடுத்துக் கொள்கிறோம் என்பதெல்லாம் பொருட்டல்ல. இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நலம்.

நண்பர்கள்

நண்பர்கள்

நல்ல சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மனதளவில் சிறப்பான நலம் கிடைக்கும். எங்கேனும் ஒன்றாகக் கூடி சமைத்தோ அல்லது திரைப்படத்திற்கோ சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும். அதற்காக எப்போதும் கூட்டத்தின் மத்தியில் சிறகடிக்கும் சமூக பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டியதில்லை. மனதுக்குப் பிடித்த சில நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும்

மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும்

மூளைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். மூளையை திறம்படுத்த, அறிவையும், ஞாபக சக்தியையும் கூர்மையாக்கக் கூடிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புத்தகம் படித்தல், திரைப்படம் பார்த்தல், மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்களான செஸ் மற்றும் ஸ்க்ராபிள் ஆகியவற்றில் ஈடுபடுதல், புதிர் விளையாட்டுக்களான குறுக்கெழுத்து மற்றும் சுடோகு போன்றவற்றை நிரப்புதல் போன்றவை அறிவை கூர்மையாக்கக் கூடிய சில வழிகளாகும்.

வெளியுலகம்

வெளியுலகம்

சுத்தமான வெளிக்காற்றை சுவாசிப்பதும், சூரிய ஒளியில் செல்வதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடக்கூடியனவாகும். ஒவ்வொரு நாளும் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். அதிலும் காலைச் சூரியனின் ஒளி, மனநிலையை ஊக்கப்படுத்தக்கூடிய செரோட்டோனின் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

படுக்கையறை

படுக்கையறை

ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நலமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு உதவுகின்றது. பாலியல் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. முதுமையடையும் பருவத்தின் அத்தியாவசிய மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆதலால் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வது அவசியம். சொல்லப்போனால், ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, உடல்நலம், மனநலம் மற்றும் உணர்வுகளின் மேம்பாடு ஆகியவற்றை அளித்து, ஆரோக்கியத்தின் அனைத்து கூறுகளுக்கும் நலம் பயக்கக்கூடியதாகும்.

மனப்பான்மை

மனப்பான்மை

சிறந்த மனப்பான்மையுடன் இருப்பது நம்மை பற்றி உயர்வாக நினைப்பதற்கு வழிவகுக்கும். அதற்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்ப வேண்டும். அனைத்தையும் உயர்வான நல்ல எண்ணத்தோடு நோக்குவது மனப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தன்னிறைவு கொள்ள வைக்கும். அதிலும் மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நன்றாக உணர்ந்தால், நல்ல உடல் நலத்தைப் பெறுவதற்கான செயல்களில் நம்மால் மிக எளிதாக ஈடுபட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips for Healthy Living After 50

Taking good care of yourself is important throughout your life. As you get older, it takes on even more significance. Your body requires more maintenance and upkeep than it did earlier in life, not only for good physical health but good mental and emotional health, too.
Desktop Bottom Promotion