For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க!

By Mayura Akilan
|

Cell Phone under the pillow Dangerous
சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போல் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

எம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு சவுகரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பழசு வேண்டாம்

படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

மனம் கவரும் நிறங்கள்

படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல!

படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

மின்னணு சாதனங்கள்

படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்ப துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.

English summary

Cell Phone under the pillow Dangerous | நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க!

Recent studies have linked sleeping near your cell phone to lack of sleep. Most cell phones have 884 MHz wireless signals ...emitting radiation. One study, done by M.I.T exposed subjects to "mobile phone radiation" as they were about to sleep.
Story first published: Tuesday, May 8, 2012, 10:50 [IST]
Desktop Bottom Promotion