For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி!

By Mayura Akilan
|

Nathai Churi
இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் பல விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வகையில் நத்தைச் சூரி என்னும் மூலிகை எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு உடைதல், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுகின்றது.

மருத்துவ குணம்

பூண்டு வகையைச் சார்ந்த இந்த தாவரம் தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது. தோட்டங்களில் நீரோடைகளின் இரு பக்கங்களிலும் தானாகவே வளர்கின்றது. இதன் விதை, வேர், மருத்துவக் குணம் உடையது. நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி. இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உடல் பலம் அதிகரிக்கும்

நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும். இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.

நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.

கட்டி உடையும்

நத்தைச் சூரி பூண்டை அரைத்து கல்லைப் போன்ற வீக்கத்திற்கு தடவிவர கரையும். நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கருணைக் கட்டி மீது பற்றுப் போட்டு வர கட்டி உடையும். நத்தைச் சூரியின் சமூலத்தை அரைத்துப் பற்று போட கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும். நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாள் குடித்து வர அரையாப்புக் கட்டிகள் கரையும்.

உடல்பருமன் குறையும்

நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து பொடிசெய்து கிணற்று தண்ணீரை எடுத்து சுண்டவைத்து அதில் கலந்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

தாய்ப்பால் பெருகும்

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குணமாக்கும். 10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.

விந்து பலம் அதிகரிக்கும்

வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. வேர் நோயை நீக்கி உடலைத் தேற்றவும் விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது.

நத்தைச் சூரி வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல்பலம் அடையும். விந்து அதிகரிக்கும்.

நத்தைச் சூரி வேரை இடித்து 200 மில்லி தண்ணீரில் வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மில்லி லிட்டர் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் குணமடையும்.

English summary

Medicinal benefits of Naththaichuri | குண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி!

Nathai curi roots are dried and powdered and given along with cows milk daily twice for conditions like urinary infections, oligurea, etc. The choornam of the samoolam of this plant is helpful in reducing the over weight or obesity. The leghiyam prepared from this seeds is given twice daily for bloody diarrhoea.
Story first published: Monday, March 5, 2012, 10:37 [IST]
Desktop Bottom Promotion