For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் நோய் தீர்க்கும் தண்ணீர் விட்டான்

By Mayura Akilan
|

Satavari
ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பையை பலமாக்குகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். தண்ணீர் விட்டான் செடியின் மருத்துவ குணங்களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

தண்ணீர் விட்டான் எனப்படும் மூலிகை செடியானது சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும். உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.

ஆண்மை அதிகரிக்கும்

குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.

பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வரவேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

சுத்தம் செய்து உலர்த்தி இடித்துப் பொடித்த தண்ணீர்விட்டான் வேர்த் தூளை தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடிக்க வேண்டும். 30 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதனால், இளமை மிடுக்கு உண்டாவதோடு ஆண்மை பெருகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

கால்களில் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேர்ச்சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும், கால்களிலும் பாதங்களிலும் நன்கு பூச வேண்டும். தொடர்ந்து பூசிவந்தால் கால் எரிச்சல் கட்டுப்படும்.

பெண்களுக்கு மருந்து

தண்ணீர் விட்டான் வேரின் சாறு நான்கு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும். தாய்மையடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அது கட்டுப்படுத்தப்படும். மெனோபாஸ் பருவத்தில் ஈஸ்டோரோஜன் குறைவாக சுரப்பதால் அதிக அளவில் மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க தண்ணீர் விட்டான் வேரை சாறு எடுத்து 5 நாட்களுக்கு மூன்று வேளை உட்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியாக சுரக்கும்.

English summary

Benefits of Sathavari | பெண்களின் நோய் தீர்க்கும் தண்ணீர் விட்டான்

Shatavari is considered to be the most helpful herb for women as it helps in balancing the female hormonal system. The main herbal rejuvenative for women, Shatavari nourishes and cleanses the blood and the female reproductive organs thus supporting the body's natural fertility.
 
Story first published: Monday, June 25, 2012, 12:55 [IST]
Desktop Bottom Promotion