For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த சோகை நீக்கும் பசலை கீரை

By Mayura Akilan
|

Spinach
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது. கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை அன்னை தன்னுடைய மிக விரிவான ஜீவாதாரமான ரசவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.

பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. இது தரையில் படர்ந்து வளரும். இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடி 90 அடிக்கு மேல் படரும். படத்தில் உள்ள கொடிகள் என் மாடிவீடு வரை படர்ந்துள்ளது. பல வருடம் இருக்கும். பழங்கள் கருநீலத்தில் இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தொட்டித்தாவரமாக வளர்க்கப்படுகிறது. பச்சை இலைகள் கொண்ட வகை பஞ்சாப், உத்தரபிரதேசத்திலும் பசுமை-சிவப்பு இலைகள் வகை அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் தென் இந்தியாவில் காணப்படுகிறது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.

ரத்தம் விருத்தியாகும்

பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி ' ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் 'ஏ' பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும்.

பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும். சோடியம், போலாசின்,கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து இல்லை.

தாது கெட்டிப்படும்

இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும்.இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

இலைகள் சிறுநீர் போக்கு தூண்டுவது. இலையின் சாறு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களின் மலச்சிக்கல் போக்க பயன்படுகிறது. பிசின் போன்ற பொருள் கொண்ட இலைகளின் பசை கட்டிகளின் மீது பற்றாகப் போடப்படுகிறது.

நீரிழிவு குணமடையும்

பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது.இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு.

இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிகுதியான தண்ணீரை கொட்டிவிடாமல் மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.

பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் சேர்த்து உண்ணலாம். இது பசியை நன்கு தூண்டும். எனவே வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை அதிகமாக உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Medicinal benefits of Spinach | இரத்த சோகை நீக்கும் பசலை கீரை

Spinach is rich in essential amino acids, iron, calcium, vitamin A, and folic acid. It is the most inexpensive source of protein, providing as much protein as meat, fish, eggs, chicken do in the same quantity. Spinach is also an excellent source of fiber. The iron in spinach makes it an excellent vegetable for those suffering from anemia, menopause, or chronic fatigue syndrome.
Story first published: Wednesday, August 17, 2011, 13:23 [IST]
Desktop Bottom Promotion