For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேப்பிலை கூந்தலுக்கு செய்யும் அற்புதத்தை அறிவீர்களா?

By Hemalatha
|

வேப்பிலையின் வரலாறு மிகப் பழமையானது. ஆயுர்வேதத்திலும், அழகுக் குறிப்பிலும் இது மிக அருமையான பலன்களைத் தருகிறது.

ஆன்மீகத்திலும் வேப்பிலை ஆட்சி செய்கிறது. வேப்பிலையின் குணம் கசப்புதான். ஆனால் பலன் அற்புதங்கள்.அப்படிப்பட்ட வேப்பிலையை கூந்தலில் பொடுகிற்கென எவ்வாறு பயன்படுத்தலாம் என காண்போமா?

How to use neem for hair treatment

பொடுகினால் உண்டாகும் அரிப்பிற்கு வேப்பிலை நீர் :

வேப்பிலை நீர் செய்வது எளிது. முதல் நாள் இரவில், ஒரு லிட்டர் நீரினை நன்றாக கொதிக்க வைத்து இறக்குங்கள். அதில் சுமார் 40 வேப்பிலைகளை போட்டு, மூடி வைத்து விடுங்கள்.

இரவு முழுவதும் விட்டுவிட்டு, மறுநாள் அந்த நீரினைக் கொண்டு தலையை அலசுங்கள். பொடுகினால் ஏற்படும் அரிப்பு, வறட்சி ஆகியவற்றை போக்கிவிடும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பொடுகு முழுவதும் போய்விடும்.

வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதால், தொற்றுக்களால் உண்டாகும் பிரச்சனைகளையும் போக்கி விடும்.

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் தெரபி :

உங்களுக்கு மிருதுவான, மிளிரும் கூந்தலின் மேல் ஆசை இருக்கிறதா? அப்படியென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வேப்பிலை -20
தேங்காய் எண்ணெய் - 2 கப்
விளக்கெண்ணெய் - கால் கப்
எலுமிச்சை சாறி - 1 ஸ்பூன்.

தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் அடுப்பில் வையுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் வேப்பிலையை போடுங்கள். வேப்பிலையின் நிறம் சிவந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஆறியவுடன் வடிகட்டி, அதனுடன், எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதனை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை இந்த எண்ணெயை தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். மிருதுவான, போஷாக்கான கூந்தல் கிடைக்கும்.

வேப்பிலை யோகார்ட் மாஸ்க் :

தேவையானவை :

வெந்தயம் -2 டீ ஸ்பூன்
வேப்பிலை - 40
யோகார்ட் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்

வெந்தயம் முடி வளர்ச்சியை தூண்டும். வேப்பிலை பொடுகினை கட்டுப்படுத்தும். யோகார்ட் முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வையுங்கள். பின் ஊறிய வெந்தயத்துடன், வேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் யோகார்ட் கலந்து, தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, தலையை அலசவும்.

வேப்பிலை, தேன் கலவை :

முதல் நாள் இரவில், நீரினை கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து, அதில் வேப்பிலையை இரு கைப்பிடி போட்டு மூடி வைத்து விடுங்கள். மறு நாள் அந்த நீரினை அலசுவதற்கு பயன்படுத்துங்கள்.

ஊறிய வேப்பிலைகளை எடுத்து, அரைத்து, அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை தலையில் போட்டு, அரை மணி நேரம் ஊறிய பின், வேப்பிலை நீரில் அலசுங்கள்.

இதனை கடும் பொடுகினால் அவதிப்படுபவர்கள் பின்பற்றினால், சீக்கிரம் பொடுகு இருந்த சுவரே இல்லாமல் போய் விடும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

வேப்பிலை எண்ணெய் :

வேப்பிலை உபயோகப்படுத்துவது போல வேப்பிலை எண்ணெயும் அபார முடி வளர்ச்சியை தரும். வேப்பிலை எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இவற்றை லேசாக சூடு படுத்தி, தலைமுடியின் வேர்கால்களில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். நுனி வரை எண்ணெயை தடவி, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு ஷாம்புவைக் கொண்டு முடியை அலசவும். இரவே தலையில் எண்ணெய் வைத்து, மறு நாள் குளித்தால் இன்னும் சிறந்த பலன்கள் தரும்.

English summary

How to use neem for hair treatment

How to use neem for hair treatment
Desktop Bottom Promotion