For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகிய கூந்தலைப் பெற சில எளிய வீட்டுக்குறிப்புகள்!!!

By Sarthaj Begum
|

தலைமுடியானது உங்கள் உடல் நலத்தைப் பற்றியும், மன நலத்தைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லும் தன்மை படைத்தது. தற்போது நிலவும், மன அழுத்தங்கள், உணவுப் பழக்கங்கள், ஹார்மோன் மாறுபாடுகள், பயன்படுத்தி வரும் ஏராளமான அழகு சாதனப்பொருட்கள் போன்ற காரணிகளுக்கு மத்தியில், ஒருவர் தனது தலையில் ஆரோக்கியமான தலைமுடியைப் பராமரிப்பது என்பது சாதாரண காரியமல்ல.

கல்லூரிப் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தலைமுடியையும் முகத்தையும் துணி கொண்டு மூடிக் கொண்டு தீவிரவாதிகள் போல பயணிப்பதைக் காண்கிறோம். சுற்றுச் சூழல் அந்த அளவுக்கு மாசடைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சருமத்தைப் பராமரிப்பதைப் போலவே தலைமுடியையும் நன்றாகப் பராமரிக்க வேண்டியுள்ளது.

நமது சருமத்தைப் போலவே, நமது தலைமுடியைப் பராமரிக்கவும் கிளின்சிங், கண்டிஷனிங், வலிமைப்படுத்துதல் ஆகியவை தேவைப்படுகிறது.

அதற்கென சில வீட்டுக் குறிப்புகளை அளித்துள்ளோம். அதனைப் பின்பற்றி வந்தால், மேற்குறிப்பிட்ட கிளின்சிங், கண்டிஷனிங், வலிமைப்படுத்துதல் ஆகியவற்றை செய்த திருப்தி கிடைப்பதோடு, கூந்தலும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

Home Remedies For Beautiful Hair

கிளின்சிங் (Cleansing)

* இருப்பதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஷாம்பு எது தெரியுமா? பூந்திக்கொட்டை, சீயக்காய், நெல்லிக்காய் ஆகியவை சேர்ந்த கலவை தான். இவற்றை மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் இக்கலவையை மெதுவான தீயில் கொதிக்க வைக்கவும். அளவு பாதியாகும் வரை கொதிக்கட்டும். பிறகு வடிகட்டி எடுத்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.

* டீ ட்ரீ எண்ணெயானது (Tea Tree Oil) தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்கு சக்தி வாய்ந்த மருந்தாகும். குழந்தைகளின் தலையில் வேதிப்பொருட்களாலான ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். டீ ட்ரீ எண்ணெயானது முடிக் கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கவும், முடியை ஈரத்தன்மையுடன் வைத்திருக்கவும், தலையிலிருந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை நீக்கவும் உதவுகிறது.

கண்டிஷனிங் (Conditioning)

* அரைக் கப் மயோனைஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியை நீரில் அலசும் முன்பாக அதனை உங்கள் தலைமுடியில் நன்கு பரவும் வண்ணம் மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் பையைக் கொண்டு மூடுங்கள். 15 நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். அதன் பிறகு நன்றாக பலமுறை அலசி அதன் பிறகு ஷாம்பு போடுங்கள்.

* வறண்ட தலைமுடி உள்ளவர்கள் தலையை பன்னீரால் மசாஜ் செய்ய வேண்டும். ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் நன்கு பழுத்த பப்பாளி ஆகியவற்றைக் கலந்து கொண்டு உங்களது தலைமுடியில் தடவுங்கள். ஒருமணி நேரத்திற்குப் பிறகு ஷாம்பு போட்டு அலசுங்கள்.

* எண்ணெய்ப்பசை தலைமுடியைப் பெற்றுள்ளவாரா நீங்கள்? முல்தானி மெட்டி, நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீயக்காய் ஆகியவை கலந்த கலவையை உங்கள் தலையில் தடவிக் கொள்ளுங்கள். 40 நிமிடங்கள் கழித்து ஷாம்பு தேய்த்து அலசுங்கள்.

* பெப்பர்மிண்ட் எண்ணெயானது நல்ல குளிர்ச்சியைத் தருமாதலால், தலைமுடிப் பராமரிப்புக்கு இது மிகவும் சிறப்பானதாகும். இது தலையிலுள்ள பொடுகையும் நீக்கவல்லது. தலமுடியைக் கண்டிஷன் செய்யவும் இது பயன்படுகிறது. எண்ணெய்ப் பசையுள்ள தலைமுடியைப் பராமரிக்கவும் இது பயன்படுகிறது. இது துவர்ப்புத்தன்மை பொருந்தியது என்பதால், எண்ணெய்ப் பசையுள்ள தலையைப் பராமரிப்பதிலும் பயன்படுகிறது.

* பசுமையான வெந்தய இலைகளை அரைத்துப் பசை போலாக்கி, அதனைத் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்றாக அலசி குளித்துவந்தால், தலைமுடி நன்றாக வளரும். தலைமுடியின் இயற்கையான வண்ணம் பாதுகாக்கப்படும். தலையிலுள்ள பொடுகு நீங்கும். தலைமுடி பட்டுப் போலாகும்.

வலிமைப்படுத்துதல் (Strengthening)

* வாழைப்பழத்தில் ஏராளமான தாதுக்களும், சத்துக்களும் உள்ளன. இவை தலைமுடி கொட்டுவதைத் தடுக்கின்றன. உதிர்ந்த இடத்தில் முடிவளர்வதற்கு உதவி புரிகின்றன. வாழைப்பழத்தை அரைத்து உங்கள் தலையில் தேய்த்துக் கொண்டு குளித்தால், அது வறண்ட தலைமுடிக்கும், டை அடித்த தலைமுடிக்குமான பராமரிப்பிற்கு சிறப்பான பலனைத்தரும்.

* தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு, லெட்யூஸ் கீரையை அரைத்து சாறெடுத்து தலையில் தேய்த்துக் கொண்டு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தற்போது தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய் மருத்துவம் நல்ல பலனைத் தருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உதிர்ந்த தலைமுடிகள் மீண்டும் வளர்வதற்கு இது உதவுகிறது என்று நிறையப் பேர் நம்புகிறார்கள்.

* லாவெண்டரானது தலைமுடி வளர்வதைத் தூண்டுகிறது. தலையில் எண்ணெய் உற்பத்தியாவதை சமநிலையில் பேணுகிறது. மண்டையையும், தலைமுடியையும் நன்கு பராமரிக்கிறது.

English summary

Home Remedies For Beautiful Hair

Similar to skin, hair care involves cleansing, conditioning and strengthening. This can be achieved by adopting these simple hair care home remedies.
Story first published: Sunday, December 1, 2013, 11:34 [IST]
Desktop Bottom Promotion