For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகு சாதனங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில இயற்கை பொருட்கள்!!!

By Boopathi Lakshmanan
|

லிப் க்ளாஸ், பாடி லோஷன், ஷாம்பு என நாம் பயன்படுத்தும் செயற்கையான அழகு சாதனப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்களும் தங்களை தினம் தினம் பளபளப்பாக அலங்காரம் செய்து கொள்ள இந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவற்றில் கலக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்தும் போது, நமது தோலுக்கு எந்தவிதமான நற்பயன்களும் விளைவதில்லை.

நமது தோலை மற்றும் தலைமுடியை மேம்படுத்தும் வகையில் இயற்கை நமக்கு சில பொருட்களை கொடுத்துள்ளது. இவை ரசாயனங்கள் இல்லாத, இயற்கையான பொருட்களாகும். எனவே, நாம் தினந்தோறும் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனங்களுக்கு மாற்றாக, அவற்றை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்த 8 இயற்கையான அழகு சாதனப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்: பாடி லோஷன் மற்றும் பொடுகுகளுக்கு எதிரான மருந்து

தேங்காய் எண்ணெய்: பாடி லோஷன் மற்றும் பொடுகுகளுக்கு எதிரான மருந்து

மிதமான கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய், நமது தோலை மிகவும் ஆரோக்கியமாகவும், வறட்சி மற்றும் சுருக்கங்கள் இல்லாமலும் பாதுகாக்கும் மருந்தாக உள்ளது. இந்த எண்ணெயை தனியாகவோ அல்லது வேறு ஏதாவது மூலிகை அல்லது எண்ணெயுடன் கலந்தோ பயன்படுத்தி, உங்களுடைய தோல் மற்றும் தலைமுடியை மிகவும் நன்றாக பராமரிக்க முடியும். தலைமுடியின் கால்கள் மற்றும் தோல் ஆகியவற்றில் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும் குணத்தை தேங்காய் எண்ணெய் கொண்டிருப்பதால், இந்த எண்ணெயின் கண்டிஷனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் பலன்கள் மிகவும் அதிகமாக இருக்கும். வைட்டமின் ஈ போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்டிருப்பதால், மூதுமையின் காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்களை தேங்காய் எண்ணெய் கவர்ந்திழுத்து மறைத்து விடுகிறது.

மருதாணி: முடிக்கான சிறந்த டை

மருதாணி: முடிக்கான சிறந்த டை

தலைமுடியிலுள்ள நரை முடிகளை எளிதாக மறைக்க உதவும் டை, இப்பொழுது பலரும் விரும்பிப் பயன்படுத்தி இளமையைத் தக்க வைக்கும் பொருளாக உள்ளது. ஆனால், செயற்கையான தலைமுடி டை அடிக்கும் பொருட்களில் செகண்டரி அமைன்ஸ் அல்லது தார் கழிவுகளும் கலந்துள்ளன. இவற்றை தலைமுடிக்கு 'டை' ஆக நாம் அடித்துக் கொள்வதால் புற்றுநோய்க்கு இலவச விண்ணப்பம் போட்டு விடுகிறோம் - நம்மை அறியாமலேயே! எனவே தான், மறக்க இயலா அனுபவத்தையும், மறைக்க இயலாத இளமையையும் தரும் இயற்கையான மருதாணியை பயன்படுத்தி டை தயாரித்து தடவிக் கொள்ளச் சொல்கிறோம். மருதாணி இலைகளை, நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலையுடன் கலந்தும் அல்லது பீட்ரூட் சாறு அல்லது தயிருடன் கலந்து அல்லது எலுமிச்சை சாறு மற்றும் தேநீருடன் கலந்து என எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்தி டை தயாரிக்கலாம். இந்த மருதாணி டையை தலைமுடியில் அடித்துக் கொள்வதன் மூலமாக, தலைமுடி கருமையாக இருப்பதுடன், உடலும் குளுமையாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் பழங்கள்: புத்துணர்வூட்டும் பேஸ் பேக்

மஞ்சள் மற்றும் பழங்கள்: புத்துணர்வூட்டும் பேஸ் பேக்

பியூட்டி பார்லருக்கு செல்ல நேரம் இல்லாமலோ அல்லது ஊக்கம் இல்லாமலோ நீங்கள் இருந்தால், உங்கள் தோலை பளபளக்கச் செய்யும் எண்ணத்துடன் பேஸ் பேக்குகளை வாங்கி பயன்படுத்தி இருப்பீர்கள். எனினும், வணிக நோக்கில் கடைகளில் விற்கப்படும் இந்த செயற்கைப் பொருட்களில் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், நீண்ட கால அளவில் நற்பலன்களைத் தருவதில்லை. இவற்றிற்கு மாறாக, உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள எளிய பொருட்களைப் பயன்படுத்தி, தோலுக்கு புத்துணர்வு மற்றும் பளபளப்பைத் தரும் பேஸ் பேக்குகளைத் தயாரிக்க முடியும். மஞ்சள் பொடியுடன் சிறிதளவு தயிரைக் கலந்து உங்களுடைய முகத்தில் தடவுங்கள் அல்லது பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் களையப்பட்டு விடுகின்றன.

கற்றாழை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும்

கற்றாழை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும்

சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரக்கூடிய கிரீம்களில் பொதுவாகவே கலக்கப்படும் பெட்ரோலாட்டம் என்ற வேதிப்பொருள் தீங்கு விளைவிக்கும் குணம் கொண்டாதாகவே உள்ளது. இது போன்ற மாய்ஸ்சுரைசர்களை உடலுக்குள் தேவையில்லாமல் செல்லச் செய்வதற்குப் பதிலாக, கற்றாழை போன்ற இயற்கையான சிறந்த மாய்ஸ்சுரைசர் மற்றும் சாஃப்ட்னர்களை பயன்படுத்தலாம். கற்றாழைத் தண்டை சாதாரணமாக வெட்டி எடுத்து, அதில் உள்ள சாற்றை எடுத்து தோலில் தடவுங்கள்.

பூண்டு: பருக்களைப் போக்கும்

பூண்டு: பருக்களைப் போக்கும்

இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிரம்பியிருக்கும் பூண்டு, இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கண் கவரும் வகையில் சருமத்தை பளபளக்கச் செய்யவும் உதவுகிறது. மேலும், முகப்பருக்களிலிருந்து உடனடி விடுதலை பெற விரும்புபவர்கள் பூண்டை அரைத்து நேரடியாக அப்படியே முகத்தில் தடவி நிவாரணம் பெறலாம். பூண்டின் மேல் தோலை நீக்கிவிட்டு, முகப்பருக்கள் வந்துள்ள பகுதிகளில் அதனை வைத்து தேய்த்தும் நிவாரணம் பெற முடியும்.

சந்தனம்: பொலிவான சருமத்தைக் கொடுக்கும்

சந்தனம்: பொலிவான சருமத்தைக் கொடுக்கும்

பருக்களைத் தடுக்க உதவும் இயற்கையான பொருட்களில் ஒன்றாக இருக்கும் சந்தனம், உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. பாதாம் எண்ணெயுடன், சந்தன எண்ணெயை சில சொட்டுக்கள் விட்டு, சருமத்தின் மேல் மசாஜ் செய்வது போல தடவிக் கொள்ளுங்கள் அல்லது கொதிக்க வைத்த நீரில் சில சொட்டுக்கள் சந்தன எண்ணெயை விட்டு, அந்த நீராவியை சுவாசியுங்கள்.

ஒரு கோப்பை தயிர், அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சந்தனப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சக்கரை ஆகியவற்றை பசை போல கலந்து தயார் செய்யவும். இந்த பசையை உங்களுடைய முகத்தில், மென்மையாக மற்றும் வட்ட வடிவில் தேய்க்கவும், அரை நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் முகத்தை சுத்தமாகக் கழுவி காய வைக்கவும்.

பூந்திக்கொட்டை மற்றும் சீயக்காய்: மென்மையான ஷாம்பு

பூந்திக்கொட்டை மற்றும் சீயக்காய்: மென்மையான ஷாம்பு

அதிகளவு நுரையை உருவாக்கக் கூடிய சோடியம் லாரில் சல்பேட் கலந்து, சந்தைகளில் விற்கப்படும் ஷாம்புக்களை வாங்குவதால், பிசுபிசுப்பான தலைமுடி கிடைக்குமே தவிர, சுத்தம் கிடைக்காது. மேலும், முடிக்கால்களுக்கு மிகவும் அவசியமான எண்ணெய்களை ஸ்கால்ப்பில் இருந்து நீக்கும் தவறான பணியையும் செயற்கை ஷாம்புக்கள் செய்து விடுகின்றன. இது போன்ற ஆபத்துக்களை இயற்கையாகவே களையக்கூடிய மூலிகையாக இருப்பது, பூந்திக்கொட்டையும், சீயக்காயும் கலந்த கலவையாகும். இந்த இரண்டையும் பொடியாக்கி சமமான அளவில், வெந்நீரில் கலக்கவும்; அந்த பசையை முடியில் தடவிக் கொண்டு குளிக்கவும். இவ்வாறு சம அளவிலான பசையை கலப்பதன் மூலம், உங்களுடைய தலைமுடி மிகவும் வறண்டு போவதாகக் கருதினால், பூந்திக்கொட்டை பொடியின் அளவை சற்றே குறைத்துக் கொள்ளவும்.

மாதுளை விதை: இயற்கையான லிப்ஸ்டிக்

மாதுளை விதை: இயற்கையான லிப்ஸ்டிக்

அதிக நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பது, புகைப்பழக்கம், போதிய அளவு தண்ணீர் இல்லாமல் மற்றும் மிகவும் அதிகமான அளவு காப்ஃபைன் போன்றவற்றால் உங்களுடைய உதடு கருமையாகி விடலாம். அதே நேரம், நீண்ட நாட்களுக்கு, நாள் தவறாமல் லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவதும் இந்த கருமைக்கு காரணமாக இருக்கும். இவ்வாறு இரசாயனப் பொருட்களால் கருமையடையும் உதட்டை சிவக்கச் செய்வதற்காக, மேலும் அதிகமான லிப்ஸ்டிக்கையே நீங்கள் பயன்படுத்துவீர்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கும்! ஆகவே இந்த தொடர்கதையை நிறுத்தி விட்டு, இயற்கையான முறையில் மாதுளை விதைகளைப் பயன்படுத்தி ஸ்கரப்களை தயாரித்து பலன் பெறலாம். மாதுளை விதைகளை நன்றாக அரைத்து விட்டு, அதனை சிறிதளவு மில்க் க்ரீமில் கலக்கவும். இந்த கலவையை தினமும் உதட்டில் தடவி வந்தால், உங்களுடைய உதடு முழுவதும், இயற்கையான முறையில் சிவந்து காணப்படும். மேலும், அரைக்கப்பட்ட மாதுளை விதைகளுடன், சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து பசை போல தயாரித்து, அந்த கலவையையும் உங்களுடைய உதடுகளில் மென்மையாக தடவிக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Herbal Alternatives To Cosmetics

Most women use various cosmetic products every day to prep their skin. But are these chemical laden tubes good for our skin and hair in the long run? Nature has provided several products that have the ability to improve the condition of our skin and hair in a totally safe manner, free of chemicals. Here are a few natural alternatives to everyday cosmetics which will help you make the switch.
Desktop Bottom Promotion